மலையேறும் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை!

மலையேறும் மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை!

லை வாசஸ்தலங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் பரபரப்புகளுக்கு விடுதலை அளித்து புத்துணர்ச்சி தருவதில் முதலிடத்தில் உள்ளன. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் என அவரவர் வசதிக்கேற்ப மலை வாசஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, குடும்பமாகவோ நண்பர்களுடனோ சுற்றுலா செல்பவர்கள் அதிகம். நண்பர்களுடன் செல்பவர்கள் தங்கள் டென்சனைக் குறைக்க மதுபானங்கள் அருந்தி மகிழ்வது வழக்கம் அல்லது பழக்கம்!

    மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அது மற்றவர்களைப் பாதிக்காத வரைதான். வாயிருந்தாலும் எதிர்க்க முடியாத குடும்பங்கள் மட்டுமல்ல வாயில்லா ஜீவன்களான குரங்குகளும் குடியினால் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

    கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி மலை பாதையோர வனப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் வசிக்கின்றன. அவை மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து பயணிகள் வீசி எறியும் உணவுப் பொருட்களை உண்டு களித்து வருகின்றன! உணவுப்பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்குகளை அப்படியே வீசி எறிவதால் குரங்குகள் பிளாஸ்டிக்குகளையும் கடித்துத் தின்பதால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப் படுவதாக சமூகஆர்வலர்கள் அலறினாலும் சுற்றுலா பயணிகள் காதில் வாங்குவதில்லை.

    இதற்கு ஒரு படி மேலாக மதுப்பிரியர்கள் தாங்கள் குடித்த காலி மதுப் பாட்டில்களை அப்படியே வீசி விட்டுச் செல்வது கொடுமையான விஷயம். அந்தப் பாட்டில்களில் இருக்கும் சிறிது மதுவையும் குடிக்கும் குரங்குகள் போதையில் மலைப்பாதையில் தாறுமாறாக திரிந்து வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு தங்கள் உயிரையும் இழக்கும் கொடூரம் நிகழ்கிறது.

து குறித்து வனத்துறையினர்  “வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மது பாட்டில்கள் கொண்டுவர சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் கொண்டு வருவதைச் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும். சோதனையில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்து உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் வால்பாறையில் மட்டுமல்ல அனைத்து மலைவாசஸ்தலங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.  

       ஒழுக்கம் எனபது ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஆனது. அதை மீறும்போது அவர்களுடன் இயற்கையும் வாயில்லா ஜீவன்களும்  பாதிக்கப்படுவது வேதனையான விஷயம்...

    அரசினால்  விதிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சுற்றுலாவைச் சந்தோஷமாக கொண்டாடுங்கள். மதுப்பிரியர்களே, காலி பாட்டில்களை வீசி எறிந்து உயிர் களைக் களவாடாதீர்கள்! இது உயிரிழந்த குரங்குகள் சமுதாயத்தின்  வேண்டுகோள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com