'மெடிக் அலர்ட்' என்றால் என்ன? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

'மெடிக் அலர்ட்' என்றால் என்ன? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

சமீபத்தில் ஹீமோபீலியா என்று சொல்லப்படக் கூடிய ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் சிகிச்சைக்கு உதவி செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவருமே பொதுமக்களிடையிலும், ஊடகங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டனர்.

அந்தச் சிறுமியின் நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையே கிடையாது என்றும் இதற்குப் பொருத்தமான சிகிச்சை முறைகள் வெளிநாடுகளில் தான் கிடைக்கிறது என்றும் அதுவும் கூட பெரும் அளவில் பணத்தைக் கரைக்கக் கூடிய வகையிலான காஸ்ட்லி சிகிச்சைமுறைகள் என்றும் அந்தச் சிறுமியின் பெற்றோருக்குக் கூறப்பட்டிருந்தது.

பிறந்தது முதலே சிறுமி இந்த நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் குழந்தையாக இருந்த போது சிகிச்சைக்கு ஒரு யூனிட் ரத்தம் தேவைப்பட்டதாகவும், இப்போது சிறுமியாக வளர்ந்த நிலையில் அவருக்கு ஒவ்வொரு முறையும் சிகிச்சையின் போது 7 யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.

சிறுமிக்கு உடலில் எங்கு அடிபட்டாலும் ரத்தம் வெளியேறத் தொடங்கினால் அது தானாக உறைந்து நிற்காது. சாதாரணமாக நமக்கு அடிபட்டால் சிறிது ரத்தம் வெளியேறும் பின்னர் அப்படியே உறைந்து காய்ந்து நாட்பட உதிர்ந்து மேற்தோல் மூடி விடும் இல்லையா? ஆனால், இந்தச் சிறுமிக்கு அப்படி இல்லை.

உடலில் உள்ளுறுப்புகளில் சேதம் என்றாலும் சரி, வெளி உறுப்புகளில் அடிபட்டாலும் சரி ரத்தம் வெளியேறத் தொடங்கினால் தொடர்ந்து அதை நிறுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படும் வரை ரத்தம் உறையாமல் வெளியேறிக் கொண்டே இருக்கும். இது மிக ஆபத்தான ஒரு நோய். நோய் குறித்த போதிய தெளிவும், கவனமும், புரிதலும் இல்லாமல் இருந்தால் மரணத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு ஆபத்தான நோயாக இது கருதப்படுகிறது.,

1 யூனிட் ரத்தம் செலுத்த 1800 ரூபாய் செலவாகும். இப்போது அந்தச் சிறுமி வளர்ந்து விட்டதால் 7 யூனிட் ரத்தம் செலுத்த வேண்டுமாம். அப்படியானால் ஒருமுறை சிகிச்சை பெற 12,600 ரூபாய் செலவாகும்.

சிறுவர், சிறுமிகளுக்கு அடிபடக் காரணம் பெரிதாகத் தேவையில்லை. பற்கள் விழுந்து முளைக்கும் போதோ, அல்லது விளையாடும் போதோ நிச்சயமாக ரத்தம் வெளியேறத் தொடங்கும். அப்போதெல்லாம் என்ன செய்ய முடியும்.

சாதாரண ஆட்டோ டிரைவர் நான், என் மனைவி வீட்டு வேலை செய்பவர். எங்களது வருமானத்தில் என் மகளின் சிகிச்சைக்குரிய செலவுகளை மேற்கொள்ள ஒவ்வொருமுறையும் நாங்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டியிருந்ததால் சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்திக்க விரும்பிக் காத்திருந்தோம். அவர் மூலமாக முதலமைச்சரே நேரில் என் குழந்தையைப் பார்த்து விசாரித்து விட்டு இந்தியாவில் இந்த வகை சிகிச்சைக்கு பெயர் பெற்ற சிறப்பு மருத்துவரான அருணா அவர்களை நியமித்திருப்பது நாங்கள் எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சி! சிறப்பு மருத்துவர் அருணா குறித்த விவரங்களைப் பெற அரசு மருத்துவமனை டீன் உதவினார் என்று தெரிவித்தார். முதலமைச்சரே அவரிடம் நேரில் பேசி இந்த உதவியை எங்களுக்குச் செய்தார். என் மகளின் சிகிச்சை செலவு மொத்தமும் இனி அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார் என தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களில் பேசிய அரசு மருத்துவமனை டீன் தெரிவித்த ஒரு விஷயம் மிக முக்கியமானது. அது தான் ‘மெடிக் அலர்ட்’ குறித்து நம்மை இப்போது சிந்திக்க வைத்திருக்கிறது.

இந்தச் சிறுமிக்கு வந்திருக்கும் ‘ஹீமோஃபீலியா’ மட்டுமல்ல, இது போன்று 24 மணி நேரமும் அலர்ட்டாக இருந்தாக வேண்டிய இன்னும் சில நோய்களும் இந்த உலகில் உண்டு. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளாகவோ, சிறுவர்களாகவோ இருப்பின், அவர்களது நோய் குறித்த மேலதிகத் தகவல்களையும், அதற்கான முதலுதவி எப்படி அளிக்கப்பட வேண்டும்? மருந்துகள் எங்கு கிடைக்கும்? அவர்களுக்கான சிறப்பு மருத்துவம் எங்கு அளிக்கப்படுகிறது? போன்ற வெகு முக்கியமான விஷயங்களைப் பதிவு செய்து அதை சிறு உலோகக் குழாயில் இட்டு மூடி பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கழுத்தில் அணிவித்து விடுவது வழக்கம்.

நோயால் தீடீரென பாதிப்பு ஏற்பட்டு பெற்றோர் உடனில்லாத சமயங்களில் தாமதத்தைத் தடுக்கவும், தவறான சிகிச்சை அளிப்பதிலிருந்து காக்கவும், நேரம் விரயமாவதைத் தடுக்கவும் இந்த மெடிக் அலர்ட் உலோகக் குழாய் தகவல்கள் உதவும். இதைத்தான் அரசு மருத்துவமனை டீன் ‘மெடிக் அலர்ட்’ என்று விவரித்தார்.

இம்முறை அயல்நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அதையே நாமும் பின்பற்றினால் அபாயத்தைத் தடுக்கலாம் என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com