காவல்துறையை இழிவாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம்: சாட்டையை சுழற்றிய திருமா

காவல்துறையை இழிவாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம்: சாட்டையை சுழற்றிய திருமா

விசிகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிர்புற வணிக வளாகத்தினுள்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். அந்த வணிக வளாகத்துக்கு பின்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் 3 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. அதில் ஒரு கடையை டெண்டர் வழியாக எடுத்து நடத்தி வருகிறார் சின்னக்கண்ணு.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னக்கண்ணுவின் கடையின் சுவரை  உடைத்து அந்தக் கடையை ஆக்கிரமித்த பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஒ.செ ரமேஷ் அதனைக் கட்சி அலுவலகத்தோடு இணைத்துள்ளனர்.

 இதைக் கண்டு அதிர்ச்சியான சின்னக்கண்ணு ஆரணி  காவல் நிலையத்தில் பாஸ்கரன், ரமேஷ் உட்பட சிலர் மீது புகார் தந்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணைக்கு வரும்படி பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் அவர் வரவில்லை. அதன்பின் விசாரணைக்கு வந்தவர், 'என்னையே விசாரணைக்கு அழைப்பியா?' என எஸ்.எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசிய பகலவன், எஸ்.எஸ்.ஐ யின் சாதி பெயரைக் கேட்டு மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கட்டடம் இடித்து ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஸ்கரன், ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி பிணை கிடைத்தது. வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு மாலை, மரியாதை செய்து அவரை ஊர்வலமாக காரில் அழைத்து வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

காவல் துறையிடம் அனுமதி பெறாமல் விசிகவினர் ஊர்வலம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த ஆரணி நகர காவல் நிலையம் முன்பு ஊர்வலமாக வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் கோஷம் எழுப்பினர். இதனை போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

காவல் துறையினருக்கு எதிராக பேரணியாக சென்று அவர்களை மிக மோசமாக இழிவாக ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சமூகவலைதளங்கள் மூலம் வைரலாக பரவியது. இப்படி இழிவாக பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு போலீசுக்கு மேலிடத்திலிருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து விசிகவினர் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவனை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே. எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும்.

 அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட விதம் கவலையளிப்பவையாக உள்ளன. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com