ரயிலை வழிமறித்த காட்டு யானைகள்;

ரயிலை வழிமறித்த காட்டு யானைகள்;

தகையில் மலை ரயிலை மூன்று காட்டு யானைகள் வழி மறித்ததால் இன்ஜின் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை பின்னோக்கி ஓட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர் மலைப்பாதை வழியில் வலம் வருவது வழக்கமாகி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்பது காட்டு யானைகள் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு காட்டுக்கு செல்லாமல் ஒரு மாத காலமாக வனத்துறைக்கு சவால் விடுத்து வந்தன.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 5 காட்டு யானைகள் மீண்டும் மலை ஏறி வந்தது. வனத்துறை யினரின் கூட்டு முயற்சியால் இரண்டே நாட்களில் இந்த யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தி விடப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்றிரவு காட்டேரி பூங்கா பகுதிக்கு மேலும் மூன்று பெண் காட்டு யானைகள் புதிதாக வந்தன. இதையறிந்த குன்னூர் வனத்துறையினர் அதனை விரட்டச் சென்றபோது, ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகளும் வனத்துறையினரை விரட்டின. 

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 10:30 வந்தடையும். மலை ரயில் குன்னூர் நோக்கி ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வந்த மூன்று யானைகளும் ரயிலை மறித்தன. ஆனால், ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை பின்னோக்கி செலுத்தியதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

பின்னர், வனத்துறையினர் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதையடுத்து, மலை ரயில் ரன்னிமேடு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் மலை ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமானது. பின்னர் ரயில் குன்னூர் நோக்கி பயணித்தது. இந்த ரயிலில் பயணம் செய்த சுற்றுலாவாசிகளுக்கு இது ஒரு புது அனுபவமாக அமைந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com