
பிக் பாஸ் கமல்ஹாசன், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்ற நாள் முதல் குஷியில் இருக்கிறார். யாத்திரை முடிந்ததும் ராகுல் காந்தியுடன் அமர்ந்து அன்றாட அரசியல் பற்றி பேசி முடித்து சென்னை திரும்பியது முதல் அரசியலில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்திருக்கிறார்.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நேற்று அறுசுவை விருந்து அளித்து பேசினார். அவரது பேச்சும் ருசிகரமாக இருந்தது.
பா.ஜ.க. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே நாம் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்றோம். மத அரசியைலை தடுத்து, தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நான் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். நான் 'ஏ' சொன்னால் 'ஏ' சொல்லுங்கள். 'பி' சொன்னால் 'பி' சொல்லுங்கள். 'சி' சொன்னால் 'சி' சொல்லுங்கள்.
நீங்கள் கேட்டுக்கொண்டதால் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். கட்சியின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவுகளை உதாசீனப்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். கட்சியினர் செய்யும் பணிகளில் நல்லது, கெட்டது இரண்டையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினா கடற்கரையில் நடத்தவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
எந்தக் கட்சியாக இருந்தாலும், மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது ஏனென்றால், இது தமிழ்நாடு. நீண்ட, நெடிய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்னும் பெயர் கிடைத்திருக்கிறது. இதை மாற்றச் சொல்லுவதற்கு அவர் யார்?
அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றச் சொன்னால், மாற்றிக்கொள்வாரா? அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் 'மக்களுக்கானது' எது எப்படியோ, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கு கமல்ஹாசன் தயாராகிவிட்டார். எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி அழகு பார்க்க வைக்க வேண்டியது இனி காங்கிரஸ் கட்சியின் கடமை என்கிறது, மய்யத்து வட்டாரம்.