முந்தைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? அறிக்கை கேட்கும் தமிழக அரசு!

முந்தைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? அறிக்கை கேட்கும் தமிழக அரசு!

ந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் தற்போது உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர்கள் தமிழக அரசைக் கேட்டு வந்தனர். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தங்களது தேர்தல் அறிக்கையில், ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம்’ என்று கூறி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ‘இந்த வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை அரசாணையாக வெளியிடப்படும்’ என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே உறுதியாகக் கூறி இருந்தது. அதைத் தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள், நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் என அந்த அரசாணை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.

2004ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக, தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com