நங்கநல்லூர் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் பலி - செய்யத் தவறியதென்ன?

நங்கநல்லூர் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் பலி - செய்யத் தவறியதென்ன?

நேற்று சென்னை, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்ற 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் 22 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் களுக்கு நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடை பெறுவதுண்டு. அதையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி அருகில் உள்ள மூவரசன்பேட்டை குளத்தில் நடை பெறுவதுண்டு. நேற்று காலை நடந்த தீர்த்தவாரியில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்திருக்கிறார். சேறும் சேகதியும் நிறைந்த இடம் என்பதால் மீள முடியவில்லை.

அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த நான்கு இளைஞர்களும் ஆழமான பகுதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். இதையெடுத்து தீயணைப்புத் துறையினர்  வரவழைக்கப்பட்டு ஐந்து பேரையும் தேடும் பணிகள் ஆரம்பமாகின. படகு மூலமாக தேடியதில் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டார்கள்.

தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில் என்பதால் திருவிழாக் கால நடை முறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. தமிழகத்தின் சாதாரண குக்கிராமங்களில் கூட திருவிழா காலங்களில் காவல்துறை பந்தோபஸ்து கோரப்படுகிறது. ஆனால், தலைநகரமான சென்னையின் இதயப்பகுதியில் நடைபெறும் தீர்த்தவாரி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறையை யாரும் அணுகியதாக தெரியவில்லை.

அங்கிருந்தவர்களில் யாருக்காவது நீச்சல் தெரிந்து இருந்தால் ஒரிரு உயிர்களையாவது காப்பாற்றியிருக்க முடியும். கையில் உள்ள கயிறு, வேஷ்டி, சட்டை போன்றவற்றின் உதவியோடு காப்பாற்றியிருக்கலாம். தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆபத்து நேர்ந்தால் காப்பாற்றுவதற்கு பேரிடர் படைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

இது குறித்து கட்டிடக்கலை நிபுணரும், பொதுப் பணித்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான முத்துக்குமரனிடம் கேட்டோம்.

'காவிரி கரையோர நகரங்களில் தீர்த்தவாரி என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடப்பதுண்டு. தீர்த்தவாரி நடைபெறும்போது சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரெகுலேட்டர் ஷட்டர் மூலமாக நீரோட்டத்தை கட்டுப்படுத்தி வைப்பார்கள். அதையும் மீறி தீர்த்தவாரியில் பங்கேற்பவர்கள் தவறி விழுவதுண்டு. நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதும் உண்டு.

காவிரி கடைமுகத்திலும், கடலோரங்களிலும் நீரோட்டம் இருப்பதன் காரணமாக களிப்பு மண் சேர்வதில்லை. அதனால் வழுக்கி விழுவதோ அல்லது சகதியில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களோ குறைவாக இருக்கும். விபத்துகள் நேர்ந்தாலும் மூச்சுத் திணறி உயிர்போகும் சம்பவங்கள் அரிதான விஷயம். நீரோட்டம் இல்லாத குளங்களில் சகதி மணல் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்போது குளத்தின் ஆழம், தண்ணீர் அளவு, சகதி போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

குளத்தில் இறங்கி பழக்கப்படாத இளைஞர்கள் என்பதால் அவர்களால் மீண்டெழு முடியவில்லை. நீச்சல் பயிற்சிகள் பெற்றிருந்தாலும், இது போன்ற சகதி நிறைந்த குளங்களில் நீச்சல் மேற்கொள்வது கூட கடினமான விஷயம்தான். இது போன்ற சம்பவங்களில் பதட்டம் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துவிடுகிறது' என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com