புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவது தமிழர்களுக்கு பெருமை: ஒபிஎஸ்
தலைநகர் டெல்லியில் நாளை (மே 28) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழர்களின் பெருமைச் சேர்க்கும் வகையில் செங்கோல் மாதிரி வைக்கப்படுவதை வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் அஇஅதிமுக சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை சில எதிர்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல, மாநிலங்களுக்கான சட்டமன்ற பேரவை கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான புதிய கட்டடங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில முதலமைச்சர்களால் திறக்கப்படுகிறதோ, அதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் திறக்கவிருக்கிறார்கள். இதில் தவறேதுமில்லை. இதுதான் பெருத்தமானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.