தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

லகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தமிழர்தம் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பாரம்பரியச் சின்னமாக விளங்கி வருகிறது. ராஜராஜ சோழ மாமன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் வானை முட்டும் உயந்த கோபுரத்துடன் ஆண்டுகள் ஆயிரத்தைக் கடந்தும் அழகுறத் திகழ்கிறது. ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தன்னகத்தே கொண்ட இந்தக் கோயிலை கண்டு தரிசிப்பதற்கும் ரசித்து மகிழ்வதற்கும் உலகம் முழுவதிலும் இருந்து தினம் தினம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா, சித்திரைத் திருவிழா, நவராத்திரி உள்ளிட்ட பல விசேஷங்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான திருவிழாவாகக் கருதப்படும் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்ஸவர் சந்திரசேகரர், விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. நந்தி படம் அச்சிடப்பட்ட கொடி நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஏராளமான மலர்களால் கோயில் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாசார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்களின் பக்திப் பரவசத்துக்கு மத்தியில் அவர்கள் எழுப்பிய 'பெருவுடையாரே' எனும் பக்தி கோஷத்துக்கு மத்தியில் கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் 18 நாட்கள் வெகு விமர்சையாக சித்திரைப் பெருவிழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துக் கோயில் தரப்பில் கூறும்போது, ’ஸ்ரீ சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் கோயிலுக்குள் புறப்பாடாகிக் கொடியேற்றப்பட்டது. நாளை 18ம் தேதி காலை பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடைபெறும். 19ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெற உள்ளது. தினமும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி வீதியுலா நடைபெறும். வரும் மே மாதம் 1ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேரோட்டத்தின் அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோயிலில் இருந்து தேருக்குப் புறப்படுவார்கள். பின்னர் காலை 6 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளிய நிலையில் திருத்தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 4ம் தேதி சிவகங்கைப் பூங்கா குளத்தில் தீர்த்தவாரியுடன் 18 நாட்கள் திருவிழா நிறைவு பெறும் என்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com