சென்னையில் டாஸ்கான் 2023: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்!

டாஸ்கான் 2023
டாஸ்கான் 2023
Published on

மிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தை (டாஸ்கான் 2023) இன்று சென்னை தனியார் ஹோட்டலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023), சென்னை தாஜ் கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரநிதிகள் பங்கேற்றனர்.

இந்த தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தில் விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு மறுவாழ்வு, விளையாட்டு நிர்வாகம் மற்றும் மேம்பாடு, ஃப்ரான்சைஸ் லீக்ஸ் (Franchise Leagues), விளையாட்டு பயோமெக்கானிக்ஸ் (Sports Biomechanics), விளையாட்டு உடலியல் (Sports Physiology), ஊட்டச்சத்து (Nutrition), உயர் செயல்திறன் விளையாட்டுப் பயிற்சி (High-Performance Sports Training), விளையாட்டு தொழில்நுட்பம் (Sports Technology) மற்றும் இ-விளையாட்டு (E-Sports) போன்ற சர்வதேச அளவில் விளையாட்டு துறை தொடர்பான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதங்கள் பன்னாட்டு விளையாட்டு துறை நிபுணர்களால் நிறுவகிக்கப்படுகிறது

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,” தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் 2023-ஐ தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழ்நாட்டில் விளையாட்டு அறிவியல் தொடர்பான முன்னெடுப்பு. முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த கருத்தரங்கம் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 2023 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்தோம்.

இந்த முயற்சி போன்ற நமது தொலைநோக்குப் பார்வைதான் நமது மாநிலத்தை விளையாட்டுத் துறையில் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும். TASCon 2023 என்று அழைக்கப்படும் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் 2023 பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது ஒரு நெகிழ்ச்சியான தருணம்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் நிகழ்வாகும், இது விளையாட்டு அறிவியலில் வல்லுனர்களின் மட்டும் பங்கேற்கும் கருத்தரங்கம் இல்லை; இது நமது விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்கான முயற்சியாகும். டாஸ்கான் 2023-இல் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் விளையாட்டு அறிவியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட பிரதிநிதிக பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, எப்படி அறிவியலின் ஆதிக்கம், எல்லாத்துறையிலும் மேலோங்கி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதன் காரணமாக நாம் அடைந்து வரும் முன்னேற்றம் என்பது சாதாரணமானது அல்ல. விளையாட்டுத்துறையிலும் அறிவியல் இன்றைக்கு பெருமளவில் பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இங்கே நிறைய விளையாட்டு வீரர்களும் – பயிற்சியாளர்களும் வந்துள்ளீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழை அறிவியல்படுத்த வேண்டும் என்று எண்ணற்ற முயற்சிகளை எடுத்தார்கள். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், விளையாட்டுத்துறையில் அறிவியல் இருக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

அதன் விளைவாகத்தான், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மன்றம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம்.அதற்கான பணிகள் விரைவிலேயே தொடங்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

பல விளையாட்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்வதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளில் இது ஒரு முன்னோடி என்பதை தமிழ்நாடு நிரூபித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தியது. ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 சென்னையில் நடத்தினோம். ஆசிய கோப்பை ஹாக்கி 2023 ஐ தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தியது. உலக சர்ஃபிங் லீக் மற்றும் HCL சைக்ளோத்தான் ஆகியவை நமது மாநிலத்தின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு அடுத்த மாதம் முதல் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்டை சென்னையில் நடத்த தயாராகி வருகிறது.

இந்திய ஒன்றியம் ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான சரியான இடமாக தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ளது. மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் அதிநவீன "உலகளாவிய விளையாட்டு நகரத்தை" உருவாக்குவதற்கான ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள 29 விளையாட்டரங்கங்களுடன் 10 சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். முதன்முறையாக, பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆறு மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாராவிளையாட்டரங்குகளை அமைக்கவுள்ளோம். தமிழ்நாட்டில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் முதல் முதலீடு இதுவாகும்.

முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கவனம் தகுதியான வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதோடு, தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, விளையாட்டில் அறிவியலை மேம்படுத்த இந்த கருதரங்கத்தை நடத்துகிறோம். மிகவும் முக்கியமான இந்த கருத்தரங்கத்தை நடத்துவதற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கியதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

நமது மதிப்பிற்குரிய பன்னாட்டு விளையாட்டு துறை நிபுணர்களால் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தில் விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு மறுவாழ்வு, விளையாட்டு நிர்வாகம் மற்றும் மேம்பாடு, ஃப்ரான்சைஸ் லீக்ஸ் (Franchise Leagues), விளையாட்டு பயோமெக்கானிக்ஸ் (Sports Biomechanics), விளையாட்டு உடலியல் (Sports Physiology), ஊட்டச்சத்து (Nutrition), உயர் செயல்திறன் விளையாட்டுப் பயிற்சி (High-Performance Sports Training), விளையாட்டு தொழில்நுட்பம் (Sports Technology) மற்றும் இ-விளையாட்டு (E-Sports) போன்ற சர்வதேச அளவில் விளையாட்டு துறை தொடர்பான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதங்கள் நிறுவகிக்கப்படுகிறது.

இந்த கருத்தரங்கம் விவாதங்கள் மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் விளையாட்டு அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைப்பதாகும். இது நமது விளையாட்டு வீரர்களை சாதனையின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் அதிநவீன நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆராய்வதாகும். இது நமது விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நல்வாழ்வை மேம்படுத்துவது, சிறந்த கவனம் மற்றும் ஆதரவை அணுகுவதை உறுதி செய்வதாகும்.

நம்முடைய விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகள் – பயிற்சியாளர்கள் அனைவரும் இந்த இரண்டு நாள் மாநாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அறிவியலின் துணையோடு விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும். அதன் மூலம், தமிழ்நாட்டுக்கும் – இந்தியாவுக்கும் பெருமைத் தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com