ஐநூறு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுகிறது டாஸ்மாக் நிறுவனம்!

ஐநூறு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுகிறது டாஸ்மாக் நிறுவனம்!

மிழகத்தில் மொத்தமாக ஐயாயிரத்து முன்னூற்று இருபத்தொன்பது மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் இதற்கு முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி அந்த 500 டாஸ்மாக் கடைகள் எதுவென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள மூடலாம், அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் இருந்து பெறப்பட்டது.

இந்த நிலையில், 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. அந்த 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை இன்று வெளியான நிலையில் நாளை முதல் அந்தக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி அறிவிப்புக்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.4.2023 நாளிட்ட அரசாணை எண் 140 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

மேற்படி அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com