நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மருத்துமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் உள்ள இடஙகளில் 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் தமிழகம் முழுவதும 500 கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை குறைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் பொதுவிடங்களில் ஆட்சியரின் அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி, சமூக அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
இந்நிலையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் அறிவித்ததார். இதன்படி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள், குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஆரம்பமாகின.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவதும், கடைகளை அகற்றுக்கோரி கோரிக்கை விடுப்பதும் பத்தாண்டுகளாக தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அ.தி.மு.கவோ தி.மு.கவோ எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரும் கோரிக்கைளை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக தி.மு.க ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார். பள்ளிகளில் திறப்பதற்குள் இதை செய்து முடித்துவிட பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக டாஸ்மாக் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
நகராட்சி, மாநகராட்சிகளில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர், சென்னை என டாஸ்மாக் நிறுவனத்தை குறி வைத்து தொடரும் ஐ.டி சோதனைகளுக்கு மத்தியிலும் அமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கட்டம் நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது.