வாட்டர் பாக்கெட், பால் பாக்கெட் வரிசையில் இனி சரக்கு பாக்கெட் - டாஸ்மாக்கில் அறிமுகமாகிறது

வாட்டர் பாக்கெட், பால் பாக்கெட் வரிசையில் இனி சரக்கு பாக்கெட் - டாஸ்மாக்கில் அறிமுகமாகிறது

குடிமக்களின் வசதிக்கேற்ப இனி கையடக்க சைஸில் 90 மில்லி மதுபானங்கள் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. குடிப்பதற்காக மக்கள் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காகவே டாஸ்மாக் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

வாட்டர் பாக்கெட், பால் பாக்கெட் வரிசையில் இனி டாஸ்மாக் சரக்கு பாக்கெட் வடிவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட் அல்லது கையடக்க குளிர்பானங்கள் வடிவில் 90 மில்லி மதுபானங்கள்  டாஸ்மாக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.

மதுபாட்டில்களை தவிர்த்துவிட்டு கையடக்க சைஸில் மதுபானங்களை கொண்டு வருவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. காலியான மதுபான பாட்டில்கள் பயன்பாட்டிற்கு பின்னர் பொதுவெளியிலும், நீர் ஆதாரங்களிலும் எறியப்படுவதால் சுற்றுச்சுழல் சீர்கேடு அடைகிறது. பாட்டில்கள் உடைந்து கண்ணாடி சில்லுகள் பலரது கால்களை பதம் பார்த்துவிடுகின்றன.

இது தவிர 180 மில்லி அளவுள்ள பாட்டில் மதுவகைகளை பயன்படுத்தும்போது பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 90 மில்லி என்னும் போது தனிநபர்கள் வாங்கி குடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று விட முடியும் என்கிறார்கள்.  டாஸ்மாக்கில் குடிப்பவர்களில் 40 சதவீதம் பேர் மற்றவர்களோடு சேர்ந்து குடிக்கிறார்கள். அடுத்தவர் குடித்து முடிக்கும் வரை குறைந்தபட்சம் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் யாரும் டாஸ்மாக் வாசலில் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது என்பதற்காக மாற்றுவழிகளை சிந்திந்தோம்.. அதன்படி அண்டை மாநிலங்களில் மதுபானங்கள்  எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம்.  அண்டை மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் 90 மில்லி மதுவை கையடக்க பாக்கெட்டில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமும் பணிக்கு செல்பவர்கள், பணி முடிந்த பின்னர் டாஸ்மாக் பக்கம் வரவேண்டியிருப்பதால் காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் திறந்து வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள். இது குறித்து இனிதான் முடிவு செய்யப்படுவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

180 மில்லி மதுவகைகளை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும்போது பல பேரால் வாங்க முடியாத நிலை இருப்பதால், 90 மில்லி பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு முடிவெடுத்திருப்பது டாஸ்மாக் விற்பனையை உயர்த்தும் என்கிறார்கள்.   இனி சரக்கு பாக்கெட்டி வடிவில் வரும் என்பதால் எளிதாக கையாளமுடியும். அனைத்து இடங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும் என்கிறார்கள். ஆவின் பால் பாக்கெட் போல்  டாஸ்மாக் சரக்கு பாக்கெட்டையும் டோர் டெலிவரி செய்யும் ஆப்ஷன் வருமா என்று இணைய விவாதங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். வேற லெவல் வளர்ச்சிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com