டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு "செவாலியே விருது"

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு "செவாலியே விருது"

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபரின் சாா்பாக, அந்நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சா் கேத்தரீன் கொலோனா செவாலியா் விருதை அவருக்கு வழங்கினாா்.

டாடா குழுமத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. டாடா குழுமம் பல்வேறு புதிய தொழில்களில் கால்தடம் பதித்ததற்கும் சந்திரசேகரன் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்நிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தியதற்காக சந்திரசேகரனுக்கு செவாலியர் விருதை வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரஃப், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினயன் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். மேலும் சந்திரசேகரனின் மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இது குறித்து டாடா குழுமம் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியா – பிரான்ஸ் இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்துவதில் பங்காற்றியதற்காக டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரான்ஸின் உயரிய செவாலியா் விருது வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டின் உயரிய விருதான 'Order of Australia’ விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத் தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக ரத்தன் டாடா எடுத்த முயற்சிகளுக்காக அவருக்கு Order of Australia விருதை வழங்கி ஆஸ்திரேலிய அரசு கவுரவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com