

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, 'மேலகிரி' (Melagiri) சுரங்கம் தோண்டும் இயந்திரம் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ. நீளத்திற்கு மூன்று வழித்தடங்களை அமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் வழித்தடம் 3-ன் ஒரு பகுதியாக, அயனாவரம் முதல் பெரம்பூர் வரையிலான 861 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை இந்த இயந்திரம் தற்போது முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்துள்ளது.
டாடா ப்ராஜெக்ட்ஸ் (Tata Projects) நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த TU02 ஒப்பந்தப் பிரிவில், இது எட்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவாகும். ஒட்டுமொத்தமாக இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை 19 சுரங்கம் தோண்டும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான திட்டமிடல் காரணமாகவே இத்தகைய கடினமான இலக்குகளை எட்ட முடிவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுரங்கப்பாதை கட்டுமானமானது பெரம்பூர் இரயில் நிலைய தண்டவாளங்கள், நடைமேடைகள் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு அடியில் மிகவும் சவாலான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதையில் குறுக்கிட்ட 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் முறையாகக் கையாளப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்று நீர் ஆதாரங்களை மெட்ரோ நிர்வாகமே முன்னின்று வழங்கியது பாராட்டுக்குரியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை மெட்ரோ மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். நெருக்கடியான நகர்ப்புறப் பகுதிகளில் எந்தவித பாதிப்புமின்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது மெட்ரோ நிர்வாகத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக ஊடகங்களில் பொதுமக்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.