‘ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’ எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

‘ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’ எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

மிழ்நாட்டில் தகுதி பெற்ற லட்சக்கணக்கான வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். அதேசமயம், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகளில் இரு மடங்கு மாணவர்கள், அதாவது 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் என்றும், இதனால் வகுப்பறைகளில் மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, ஒரு வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில், ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால், சென்ற ஆண்டு 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.

‘தமிழ் எங்கள் உயிர்மூச்சு’ என்று போலி வேஷம் போடும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் +2வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வராதது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆராய நிர்வாகத் திறனற்ற திமுக அரசு குழு ஒன்றை அமைத்ததாக செய்திகள் தெரிவித்தன. அக்குழுவின் அறிக்கை என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. ஆசிரியர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பாத நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது பெற்றோர்கள் மத்தியில், தங்களது குழந்தைகளின் கல்வி பற்றி பெரும் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதவிர, ஆசிரியர் கலந்தாய்வினை குறித்த காலத்தில் நடத்தாத காரணத்தினால் ஒரு சில பள்ளிகளில் மிகை ஆசிரியர்களும், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளன. பள்ளிகளில் மிகை ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை தற்போதுள்ள எமிஸ் (EMIS)ஐக் கொண்டே பள்ளிக் கல்வித் துறை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் மிகை ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், இதுவரை அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பலமுறை பல்வேறு காரணங்களைக் கூறி திமுக அரசு தள்ளிவைத்துள்ளது. தற்போது,ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இம்முறையாவது திட்டமிட்டபடி கலந்தாய்வினை நடத்திட வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் குறைந்தபட்சம் மிகை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல இயலும். ஓரளவு ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் பணி மாறுதல் மூலம் நிரப்பப் முடியும். பணி மாறுதல்களுக்கும், பணி இடங்களை நிரப்புவதற்கும் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் அல்லது வழக்குகள் இருப்பின், அவற்றுக்கு உடனடி தீர்வு கண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே, அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்கும் என்பது ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தாமல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com