செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வந்த பிறகு, பல பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றன என்ற செய்திகள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், இதற்கிடையில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. ஒரு நிறுவனத்தின் மிகத் திறமையான ஊழியர்களை எந்த ஒரு நிறுவனமும் வெளியேற்றியதாக சரித்திரமே இல்லை.
திறமையின் உச்சத்தில் இருப்பவர்கள் எப்போதும் பணியமர்த்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டே வருகிறார்கள். ஒரு நிறுவனத்தின் மிகத் திறமையான ஊழியர் என்பவர், அந்த நிறுவனத்திற்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்து போன்றவர்.
அவரது தனித்துவமான பங்களிப்பைக் கொண்டு பில்லியன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவனங்கள், அவரைத் தக்கவைத்துக் கொள்ள மிகுந்த கவனம் செலுத்துகின்றன.
மற்ற போட்டி நிறுவனங்கள் அந்தத் திறமையான ஊழியரை அபகரித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, அவர்களுக்குப் பல சலுகைகளையும் அள்ளிக் கொடுக்கின்றன.
ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வது, அவர்களை ஊக்குவிப்பது, நிறுவனத்தின் நிதி வலிமையை உறுதியாக்குவது போன்ற உத்திகள் AI காலகட்டத்தில் நிறுவனங்களின் முக்கிய வியூகங்களாக மாறியுள்ளன.
ஏனெனில், திறமையான ஒரு ஊழியரை இழப்பது என்பது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு பெரிய அடியாக அமையும்.
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், ஊழியர்கள் தங்கள் பங்குகளைப் பணமாக மாற்றிக் கொள்ள உதவும் ஒரு புதிய பங்கு விற்பனை குறித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் $500 பில்லியன் டாலர்களாக உயரும் என இந்த விவகாரம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது, சில மாதங்களுக்கு முன் இருந்த $300 பில்லியன் மதிப்பிலிருந்து வியக்க வைக்கும் வகையில் அதிகரிக்கும் ஒரு மதிப்பாகும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெரிய அளவிலான முதலீடும், அதன் தொழில்நுட்ப ஆதரவும் OpenAI-யின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
தற்போதுள்ள முதலீட்டாளர்களான Thrive Capital போன்ற நிறுவனங்கள் இந்த பங்கு விற்பனையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த வகை பங்கு விற்பனை, நிறுவனம் உடனடியாகப் பொதுச் சந்தையில் நுழையாமலேயே, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய ஊழியர்களுக்கு நிதிப் பலன்களை அளிக்கும் ஒரு உத்தியாகும்.
இந்த பங்கு விற்பனை ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த ஊக்கத் தொகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் ஊழியர்களை ஊக்குவிப்பதோடு, மறுபுறம் நிறுவனத்தின் நிதி வலிமையையும் சந்தையில் உள்ள அதன் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சாத்தியமான பங்கு விற்பனை குறித்த தகவல் முதன்முதலில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
முன்னணி டெக் நிறுவனங்கள் இளைஞர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்:
"எப்போதும் மிக அதிகமானத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்... ஒளிமயமான எதிர்காலம் உங்களை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும்."