உலகை ஆள வருகிறது AI என்னும் அறிவு!
Artificial Intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அடிப்படையில் ஒரு கணினி நிரலாக்க மொழி வகையைச் சார்ந்தது. சாதாரண நிரலாக்க மொழி என்பது, நாம் அந்த மொழிக்கு என்ன உள்ளீடு கொடுக்கிறோமோ அதற்கு ஏற்ற பதிலை வெளியீடாகக் கொடுக்கும். ஆனால், இந்த AI தொழில்நுட்ப நிரலாக்க மொழியானது, மனிதர்களின் அதிக பங்களிப்பு இல்லாமலே, எதையும் தானே சிந்தித்து செயல்படும் தன்மை படைத்தது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் "சிட்டி ரோபோ" போல.
கடந்த 10 ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மக்களுடைய வாழ்க்கை முறை, தேவைகள், மற்றும் தொழில்துறையின் தானியங்கி மயமாதலின் முக்கியத்துவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் இதனுடைய வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு ஏற்கனவே Voice Recognition, Navigation மற்றும் Personal Assistant என பல திறன்பேசி செயலிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
என்னதான் இது பலவகையில் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையப் போகிறது என்றாலும், இந்த AI தொழில்நுட்பத்தால், பலர் தங்களுடைய வேலையை இழக்கப் போகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எதிர்காலத்தில் பெரும்பாலான விஷயங்கள் தானாக இயங்கும் தன்மையைப் பெற்று விட்டால், மனிதர்களுக்கு இவ்வுலகில் என்னதான் வேலை என்று தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், தற்போதே பெரும்பாலானவர்கள் திறன்பேசிக்கு அடிமையாகி விட்டதை நாம் பார்க்க முடிகிறது.
சில ஆய்வுகளின் படி, 2023ல் இந்தத் துறையின் மதிப்பு 57 பில்லியன் டாலர்கள் எனவும், இது 2025ல் சுமார் 190 பில்லியன் டாலர்களாக உயரலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் தற்போது இருக்கும் துறைகளிலேயே செயற்கை நுண்ணறிவுத் துறையில்தான், அதிகப்படியான சம்பளம் வழங்குகிறார்கள்.
இதன் பங்களிப்பு இனிவரும் காலங்களில் பல துறைகளில் விரிவடையும். மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இதில் பல மாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே, அடைய விரும்பும் அனைத்தையும் நிமிடத்தில் பெற்றுவிடலாம்.