Google Map-ல் வரவிருக்கும் அட்டகாசமான அப்டேட்!
கூகுள் நிறுவனமானது அப்போது கூகுள் மேப் செயலியில் புதிய புதிய அப்டேட்டுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன் வரிசையில் புதியதாக வரவிருக்கும் 3டி முறையில் கூகுள் மேப்பைப் பயன்படுத்தும் அப்டேடானது மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு செல்ல வழி தெரியவில்லை என்றால் அருகில் உள்ள நபர்களையோ அல்லது ஆட்டோ ஓட்டுனர்களையோ தான் தேடுவோம். ஆனால், தற்போது கூகுள் மேப்பில் நாம் செல்ல வேண்டிய முகவரியை உள்ளீடு செய்தால் போதும், சந்து பொந்து எதுவாக இருந்தாலும் சரியாக நமக்கு வழி சொல்லிவிடும். இந்நிலையில், நாம் செல்லும் வழித்தடத்தை 3Dல் காட்டும் வசதியை விரைவில் கொண்டுவரவிருபதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதைச் சார்ந்து பல புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த புதிய அம்சத்தால் உலகத்தையே 3D தோற்றத்தில் கூகுள் மேப்பில் காணலாம். உலகில் உள்ள எல்லா இடத்தையும் பறவை கண் பார்வையில் பார்க்க முடியும் எனவும், சாலையில் ஒரு பறவை பறந்து போனால் எப்படி தெரியுமோ அதே போல சற்று சாய்வாக 3D வடிவில் கூகுள் மேப் பயன்படுத்தி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் உள்ள பாதைகள், பார்க்கிங் தேர்வுகள், சாலை குறுக்கீடுகள் எப்படி இருக்கிறது என்பதையும் புதிய அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப்பில் தெரிந்து கொள்ளலாம். பின்பு சாலையில் வாகன நெரிசல் எப்படி இருக்கிறது என்பதையும் எளிதாக பார்க்க முடியும். குறிப்பாக ஒரு சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தால், அங்கு அதிகப்படியான வாகனங்கள் நிஜமாகவே நிற்பதுபோல் கற்பனையாக உருவாக்கப்பட்டு காட்டப்படும்.
இது தவிர காற்றின் வெப்பநிலை, காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய கூகுள் மேப் செயலியில் டைம் ஸ்லைடர் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட உள்ளது. இது முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள், உலகின் முக்கிய 15 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த 15 நகரங்களில் இந்திய நகரம் எதுவும் இல்லை. எனவே கூகுள் மேப்பில் வரும் புதிய வசதிகளை இந்தியர்கள் அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம்.
இந்த புதிய அம்சமானது பயன்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும் என கூகுள் நம்புகிறது.