BharatNet திட்டத்திற்கு 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

BharatNet திட்டத்திற்கு 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கும் BharatNet திட்டத்திற்காக ரூபாய் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போதைய கணக்கெடுப்புகளின் படி இந்தியாவில் 85 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது கிட்டத்தட்ட 75 சதவீத மக்களிடம் இன்டர்நெட் சேவை இருக்கிறது. அதேபோல, இந்தியாவில் இன்றளவும் லட்சக்கணக்கான கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை சென்று சேராமலேயே இருக்கிறது. இதுவரை இன்டர்நெட் சேவையே பயன்படுத்தாத நபர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். இதனால்தான் மத்திய அரசு பாரத்நெட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் தடையில்லா இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என உறுதியளித்தது. 

பாரத்நெட் திட்டம் என்பது இந்தியா முழுவதும் உள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டம் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக தடையில்லா இணைய சேவையை பெற வேண்டும் என்பதே பாரத்நெட் திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு 22,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் முழுமை பெற மொத்தம் 8.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் முறையில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 6 லட்சம் கிராமங்களிலும் பிராட்பேண்ட் இணைய சேவை கட்டாயம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில்தான் பாரத்நெட் திட்டத்திற்கு கூடுதல் நிதியாக ரூபாய் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதாக மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தால் நேரடியாக மக்களுக்கு இணைய சேவை கிடைக்காவிட்டாலும், இணையம் சார்ந்த அரசு சேவைகள் விரைவாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com