ChatGPT - ஆன்லைன் ஷாப்பிங்கில் வரப்போகும் புரட்சி
புதிய API ஒன்றை தற்போது ChatGPT அறிமுகம் செய்துள்ளது. இது இணைய பயன்பாட்டையே முற்றிலும் புரட்டிப் போடும் அளவுக்கு வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக தொழில்துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
இதுவரை தகவல் தேடுதலுக்காக கூகுளை பயன்படுத்திய மக்கள், தற்போது அதிகப்படியாக ChatGPT பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வருகை டெக் துறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுவிட்டது ChatGPT. கூகுளின் நேரடி வர்த்தகத்தை இது தற்போது பாதிக்கும் தொழில்நுட்பமாக அமைந்துவிட்டது. இதற்கு எதிராக கூகுள் வெளியிட்ட AI தொழில்நுட்பமும் தோல்வியில் முடிந்ததால், அவர்களுக்கு சிக்கல் மேலும் அதிகமாகிவிட்டது.
பிறரைப் பற்றி எல்லாம் கவலைப்படாத OpenAi நிறுவனம் தான் வகுத்த பாதைகளில் தன் இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது பயனர்களிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி ChatGPT-ல் பல மேம்பாடுகள் செய்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது புதியதாக API ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதை அனைத்து விதமான வணிகர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்துவது எப்படி?
அதாவது நீங்கள் ஒரு இ - காமர்ஸ் தளத்திற்கு சென்றால், அதில் இந்த API இணைக்கப்பட்டிருந்தால், ஷாப்பிங் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் அங்கேயே கேட்டுக் கொள்ளலாம். நீங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் சார்ந்த நிறை குறைகள், ட்ரெண்டிங் பிராண்டுகள், தொழில்நுட்ப அப்டேட்டுகள் போன்ற அனைத்துமே ChatGPT உதவியோடு உங்களுக்கு அதே இடத்தில் கிடைக்கும். ஒரு பொருள் சார்ந்து அனைத்து விதமான கேள்விகளுக்கும் ChatGPT உங்களுக்கு பதில் அளிக்கும். இதை தவிர மேலும் பல அம்சங்கள் இதில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த அம்சத்தால், இணைய வணிகத்தில் மிகப்பெரிய புரட்சி வரப்போகிறது என, பல டெக் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த API, வணிக தளங்கள் மட்டுமன்றி, பல செயலிகள், இணையதளங்கள், சேவை மற்றும் தயாரிப்பு போன்ற பல இடங்களில் ChatGPT நாம் பயன்படுத்த முடியும். இனிவரும் காலங்களில் எந்த தளத்திலும் இதை இணைக்கலாம் என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது மூலம் தங்களுடைய வணிகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மேம்படுத்தும் வழிமுறைகளையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.