எலான் மஸ்க் பற்றி ChatGPT இணை நிறுவனர் என்ன சொன்னார் தெரியுமா?

எலான் மஸ்க் பற்றி ChatGPT இணை நிறுவனர் என்ன சொன்னார் தெரியுமா?

ChatGPTயின் வருகைக்குப் பிறகு, அதை பல இடங்களில் சரமாரியாக விமர்சித்திருந்தார் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க். இந்த விமர்சனங்களுக்கு அதனை உருவாக்கிய இணை நிறுவனர் முதன்முறையாக பதிலளித்து, தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளார். 

2022 நவம்பர் மாதத்தில் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதுதான் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு. இதன் வருகைக்கு பிறகு டெக் உலகமே அதிர்ந்து போய்விட்டது எனலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு கண நேரத்தில் துல்லியமான பதிலை அளித்து, இதன் பயனர்களை அசர வைத்தது ChatGPT. இதனால் பல வேலைகள் நொடியில் முடிக்கப்பட்டு, பயனர்களை அதிகமாக தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது ChatGPT. 

இதற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு கூகுள் நிறுவனமே ஆடிப்போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவர்களும் தங்களின் பங்குக்கு ஒரு AI தொழில்நுட்பத்தை உருவாக்கி களத்தில் இறக்கினார்கள். அது தப்பு தப்பாக பதிலைச் சொல்லி, ஒரே நாளில் 100 பில்லியன் டாலர்களை காற்றில் கரைத்துவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க, OpenAI நிறுவனம் ChatGPT வெளியிட்டதிலிருந்தே எலான் மஸ்க் அதை சரமாரியாக விமர்சித்து வருகிறார். இதன் தொழில்நுட்பம் மிகவும் கொடியதாக இருப்பதாகவும் அதனுடைய எல்லையை அவரால் யூகிக்கவே முடியவில்லை எனவும் சில பேட்டிகளில் கூறினார். மேலும் பழமைவாதிகளின் கையில் இது சிக்கினால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்திருந்தார். இந்த விமர்சனம் டெக் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

2018 ஆம் ஆண்டு வரை எலான் மஸ்க் OpenAI நிறுவனத்தில் தான் இருந்தார். அதன் பிறகு சில காரணங்களால் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது! தற்போது முதன்முறையாக எலான் மஸ்க் அவர்களுடைய விமர்சனங்களுக்கு OpenAI இணை நிறுவனர் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 

"எலான் மஸ்கின் விமர்சனங்களை நாங்கள் மதிக்கிறோம். ChatGPT பற்றி எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங் களுக்கு பதில் அளிப்பது எங்களுடைய கடமை. அதேசமயம் நாங்கள் உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், செயல்படுத்திய அமைப்பு போன்றவை நாங்கள் எதிர்பார்த்த மதிப்புகளை எங்களுக்கு அளிக்கவில்லை." எனக் கூறியுள்ளார். 

மேலும் “இந்த தொழில்நுட்பத்தை லாப நோக்கில் நாங்கள் உருவாக்கவில்லை. அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் OpenAI என பெயரிட்டோம். ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கூகுளுக்கு போட்டியாக இதை உருவாக்க வேண்டும் என நினைத்ததால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைவசம் இது சென்றுவிட்டது” என தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். 

அடுத்த வாரம் வேறு GPT-4 வெளிவரப் போகிறதாம். இது எம்மாதிரியான தாக்கத்தை உலகில் ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com