நான் இறந்தாலும் AI தொழில்நுட்பம் மூலம் உயிருடன் வருவேன்.
ஹாலிவுட்டில் மறைந்த நடிகர் பால்வாக்கர், டெர்மினேட்டர் திரைப்படத்தில் அர்னால்ட் உள்ளிட்ட நடிகர்களை GFX தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் படங்களில் இடம் பெறச் செய்த ஹாலிவுட் கலைஞர்கள், தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மறைந்த நடிகர்களையும் திரைப்படங்களில் கொண்டுவரலாம் என்கின்றனர்.
காஸ்ட் அவே, தி ஃபாரஸ்ட் கம்ப் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் டாம் ஹாங்க்ஸ். தான் இறந்த பிறகும் என்னுடைய நடிப்பு பயணம் AI தொழில்நுட்பம் மூலமாக சாத்தியமாகும் என நம்புகிறார். ஏனென்றால் சமீப காலமாகவே இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இவ்வுலகம் பார்த்து வருகிறது. டெக்னாலஜி துறையில் மட்டுமல்லாமல், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல துறைகளிலும் இது கோலோச்சும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்தபடியாக இப்போது சினிமாத் துறையிலும் தன் ஆதிகத்தை செலுத்த தயார் நிலையில் இருக்கிறது.
சினிமா என்றாலே அதில் முன்னணியில் இருப்பது ஹாலிவுட் திரையுலகம்தான். ஏனென்றால் ஹாலிவுட் திரைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமாக உருவாக்கப்படும். பல ஆண்டுகளாகவே கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக மறைந்த நடிகர்களையும் திரையில் காணச்செய்து வருகின்றனர். இருப்பினும் அதற்கான செலவுகள் அதிகமாவதால், கிராபிக்ஸ் காட்சிகளை எடுப்பது சற்று கடினமானது எனலாம்.
ஆனால் இதற்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைந் பயன்படுத்தி, குறைந்த செலவிலேயே ஒரு நபருடைய குரல், தோற்றம், உடல் அசைவுகள் என அனைத்துமே திரையில் துல்லியமாக காட்டிவிட முடியும் என்கின்றனர் வல்லுனர்கள். அப்படிப்பட்ட முயற்சிகளில் தற்போது ஹாலிவுட் திரையுலகம் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து பிரபல நடிகர் டாம் ஹாங்க்ஸ் கூறுகையில், "2004 ஆம் ஆண்டில் வெளியான 'தி போலார் எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் முதன்முறையாக அதில் நடித்த நடிகர்களின் முழு தகவல்களும் கம்ப்யூட்டருக்குள் செலுத்தப்பட்டது. அதில் எங்களுடைய குரல், உருவம், முக அசைவுகள் ஆகிய அனைத்தும் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் மூலமாக தத்ரூபமாக வடிவமைப்பிக்கப்பட்டு திரையில் கொண்டுவரப்பட்டது.
இது தற்போது பன்மடங்கு வளர்ந்து, நான் நினைத்தால் ஒரே சமயத்தில் 7 திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு திரைப் படத்திலும் எனக்கு வெவ்வேறு வயது வித்தியாசங்களை எளிமையாகக் காட்டமுடியும். எனவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக, எனக்கு என்ன ஆனாலும் நான் விரும்பிய வகையில் திரையில் மறு உருவம் எடுக்க முடியும்" என்கிறார் டாம் ஹாங்க்ஸ்.
இந்த தொழில்நுட்பம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தாலும், இதை சரியான முறையில் செயல்படுத்த பேச்சு வார்த்தைகள் நடந்துவருகிறது.