சர்வம் டிஜிட்டல் மயம்; அறிவோம் அதன் தாக்கம்!

சர்வம் டிஜிட்டல் மயம்; அறிவோம் அதன் தாக்கம்!

-ச. பாலசுப்ரமணியன்

பொதுத்துறை வங்கி ஊழியர் (ஓய்வு)

இன்று எந்த அலுவலகத்திலும், கணிணி என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கம். வங்கிச் சேயில் கணினி பிரதான இடம் பெறுகிறது.

நமது ஊதியம், அரசு மானியங்கள்,  வட்டித்தொகை என பலவும் நமது கணக்கிற்கு இன்று குறிப்பிட்ட நாளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதில் டிஜிட்டல் மயம் பெரும்பங்கு வகிக்கிறது.  நாம் செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தவணைகள் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதற்கும் அவைதான் உதவுகின்றன.

வங்கியில் கணக்கு துவங்குவது உட்பட பணத்தினை பற்று வரவு செய்வது வரை எதற்கும் வங்கிக்கு நேரடியாகச் செல்ல வேண்டியது இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் சாதக, பாதக அம்சங்கள் பல்வேறு தளங்களில் அலசப்படுகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் சேவைகள் பற்றிய குறைந்தபட்ச புரிதலாவது மக்கள் கொண்டிருக்க வேண்டும். அப்படி எந்தவிதமான சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதை காண்போம்.

வங்கியில் நமது கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நமது கைப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபி (One time password) எண்கள் இந்த டிஜிட்டல் பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, வங்கியுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணை பாதுகாத்துக் கொள்வதுடன், அந்த எண் எப்போது மாற்றப்பட்டாலும், அதனை வங்கிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். நமது ஆதார் மற்றும் பான் (PAN) எண்களையும் சரியாக இணைக்க வேண்டும். இவை சரியாக இருந்தால், நமது பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு உறுதிப்படும்.

இந்த பரிவர்த்தனைகளில் முதலாவதாக திகழ்வது, ஏடிம் (ATM) அட்டைகள். இந்த அட்டைகள், ஏடிம் இயந்திரத்தில் (Automated Teller Machine) பணம் எடுப்பதற்கு என்று ஆரம்பித்து, டெபிட் அட்டைகளாக மாறி, இன்று பணம் செலுத்தவதற்கு, காசோலைகளை வரவு வைக்க, நமது கணக்கு பரிவர்த்தனைகளை சரி பார்த்துக்கொள்ள, பாஸ்வோர்டுகளை மாற்றிக்கொள்ள, பிறரது கணக்குகளுக்கு பணமாற்றம் செய்ய, மின் சேவை, போன் சேவை என்ற பல சேவைக் கட்டணங்கள் செலுத்த, வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்த என தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. வலைதளங்கள் மூலம் பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தலாம்.

இவற்றினை பாதுகாப்பாக செய்வதற்கு, நமக்கு மட்டுமே தரப்படும் நான்கு இலக்கங்கள் கொண்ட பின் எண்ணை (PIN), மிகவும் ரகசியமாக பாதுகாப்பது நமது கடமை. எவருக்கும் அதனை தெரியப்படுத்துவது, யாரும் பார்க்கும் வண்ணம் எழுதி வைத்துக் கொள்வது அல்லது உள்ளிடுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.  இங்குதான், அதிகளவில் வாடிக்கையாளர்கள் ஏமாறுவது நடைபெறுகிறது. இப்போது, எலக்ட்ரானிக் சிப் எனப்படும் மின்னணு வில்லைகள் பொருத்தப்பட்ட அட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.  எந்த இயந்திரத்துடனும், தொடர்பில்லாமலே (contactless) பணம் செலுத்தும் வசதியுடன் இயங்கும் அவற்றை மிகவும் எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டும். டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் போல வரம்பு நிர்ணயம் செய்யப்பட்ட Prepaid அட்டைகளும் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதனை, நாம் வாங்கி பிறருக்கு பரிசாகவும் வழங்கலாம்.

கிரெடிட் (கடன்) அட்டைகள் என்பது இருபக்கமும் கூர் தீட்டிய கத்தி போன்றவை. அதை சரியாக உபயோகித்தால், நல்ல பயன்களை அடையலாம். இல்லாவிடில், கடனாளியாகி, அவமானப்படலாம். மேலை நாடுகளில், அவர்களது வாழ்வியல் முறை, பெரும்பாலும் கடன் சார்ந்தே அமையும். எதிர்கால வருமானத்தைக் கணக்கிட்டு, அதற்கும் செலவு திட்டம் போடுவர். ஆனால், நமது முறை, இன்றைய வருமானத்தினை மட்டும் கணக்கில் கொண்டு, வருங்காலத்திற்கு தேவை என சேர்த்து வைக்கும் சிறப்பான வாழ்வியல் முறை. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கடன் அட்டைகள் இன்று பல்வேறு ரூபங்களில் வருகின்றன. விவசாயிகள், தொழில் முனைவோர் என்று அவரவர் தேவைக்கேற்ற வகையிலான திட்டங்களுடன், சிறப்பம்சங்களுடன் வழங்கப்படுகின்றன என்பது குறிப்படத்தக்கது. கடன் அட்டைகளுக்கும் பின் எண், ஒரு முறைக்கான பாஸ்வோர்டு போன்றவை பாதுகாப்பிற்காக வழங்கப்படும்.

வலைதள வங்கி வசதி (Internet Banking) நமது அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும், வங்கிக்கு செல்லாமல், கணிணி மூலமாகவே செய்து கொள்ள வழி செய்கிறது. டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளில் உள்ளதை விட அதிக உச்சவரம்புடன் பணபரிமாற்றம், நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற பரிவர்த்தனைகள், வைப்பு கணக்கு துவக்கம், வருமானம் மற்றும் தொழில் வரிகள் கட்டுதல், வாரிசுதாரர் நியமனம் என பல்வேறு வசதிகள் இதில் உள்ளது. வருமான வரி பிடித்தங்கள் பற்றிய விவரங்கள், வருமான வரி கணக்கு (Income Tax Return) தாக்கல் செய்தல் ஆகிய வசதிகளும் உண்டு. நமக்குத் தேவையான வங்கி வட்டி சான்றிதழ், வரி பிடித்தம் போன்ற சான்றிதழ்களையும், நம் கணக்குக்கான பாஸ்ஷீட் (Passsheet) போன்றவற்றையும் நாமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள, நுழைவுச்சொல் (Login ID), பாஸ்வோர்டு போன்றவை அவசியம். தற்போது, ஆன்லைனில் கடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவும், அதற்கான அனுமதி பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கைப்பேசி வங்கி சேவை (Mobile Banking) வசதி இப்போது எல்லோராலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கணிணி மூலம் செய்யக்கூடிய அனைத்தையும் கைப்பேசி வாயிலாக நாம் பெரும்பாலும் செய்துவிட முடியும். இவற்றுக்கு, இருவிதமான பின் எண்கள் தேவைப்படும். மிக எளிதில் பண பரிமாற்றங்கள், க்யூ ஆர் (QR) கோட் மூலம் நிகழ்த்தக்கூடிய பரிவர்த்தனைகள் என இவை நமது தினசரி செயல்பாடுகளை எளிதாக்குகின்றன. வங்கி கணக்குகள் தொடர்புடைய இந்த சேவை, இன்று வளர்ந்து, வாலெட் (Wallet) என்ற அழைக்கப்படும் முன்பணம் செலுத்திய சேவை,  ஆதார் அடிப்படை மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified payment Interface – UPI)  மூலமான பரிவர்த்தனைகள் என பல விதமாக பரிமளிக்கிறது.

சாதாரணமாக, நம் கணக்கில் இருந்து வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் அனுப்ப, அவரது வங்கிக் கிளையின் IFSC கோட் மற்றும் அவரது வங்கி கணக்கு எண் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால்,  BHIM, GPay, Paytm போன்ற  செயலிகளில் அவரது மெய்நிகர் கட்டண முகவரி எனப்படும் Virtual Payment Address (VPA), கைப்பேசி எண் போன்றவை தெரிந்திருந்தால் போதும். அல்லது, அவர்கள் QR கோட்-ஐ ஸ்கேன் செய்தும் சுலபமாக பணம் அனுப்பி விட முடியும். பின் எண் பாதுகாப்பு உள்ளது. சில செயலிகள், அவற்றை உபயோகிப்பதற்கு ஊக்கத் தொகை வழங்குவதும் உண்டு.

யுபிஐ (UPI) என்பது ஒரு இயங்குதளம் (Platform). பீம் (BHIM), ஜீபே, பேடிம் போன்ற செயலிகள் அதன் மூலமாக இயங்குகின்றன.  பீம் என்பது அரசால் உருவாக்கப்பட்டுள்ள செயலி.    நமது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, நாம் நமது அல்லது பிறரது வங்கிக் கணக்கு எண்,  ஐஎப்ஸ்சி எண் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் உள்ளீடு செய்வதற்கு பதிலாக  இந்த செயலிகளை உபயோகிக்கலாம். இதன் மூலம் பண பரிமாற்றம் வரவு செலவு செய்வது எளிது. செய்தால் போதும் உடனடியாக நமது கணக்குக்கு பணம் வரவாகிவிடும். நாமும் அவர்களுக்கு அனுப்பலாம்.

இந்த யுபிஐ என்பது  ஆர்பிஐ மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்புடன் (IBA) இணைந்து செயல்படும் என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.  உலகளவில் பிரபலமாக உள்ள விஸா, மாஸ்டர் அட்டைகள் போன்று, ரூபே (Rupay) என்ற இந்திய அட்டையை இந்த நிறுவனம்தான் உருவாக்கி, பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இது பல்வேறு வங்கிகளுடன் இணைந்திருப்பதால், பண பரிமாற்றம் என்பது, எந்த தாமதமுமின்றி நடைபெறும்.  நாம் இந்த முகவரியைக் கூட உள்ளீடு செய்யத் தேவையின்றி. இன்று பயனாளர்கள் தமக்கென உருவாக்கி வைத்து கொண்டுள்ள க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து, தொகையையும், நமது பின் எண்ணையும் டைப் செய்தால் போதும், பரிவர்த்தனை முடிந்துவிடும். ஒரு கணக்குக்கு, பல செயலிகளில் நாம் முகவரி உருவாக்கிக் கொள்ளலாம். அது போல், ஒரு செயலியில் பல கணக்குகளை இணைத்துக் கொள்ளலாம்; ஆயின், எது நமது முதன்மை கணக்கு என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இந்த தளத்தில் இயங்கும் செயலியை நாம் நமது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் மட்டுமே பயன்படுத்த முடியும்.  இன்று, பல நாடுகளில், இது போன்ற இயங்குதளங்கள் செயல்படுகின்றன. அவை தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. புது வரவாக, பிரேசில் நாட்டில், பிக்ஸ் என்ற தளம் உருவாகியுள்ளது.

USSD எனப்படும் அன்ஸ்ட்ரக்சர்ட் சப்ளிமெண்டரி சர்வீஸ் டாட்டா என்ற  மற்றொரு தளத்தில், நாம் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யாமலே, ஸ்மார்ட் போன் உதவியில்லாமலே, சாதாரண கைப்பேசி  மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இது ஒரு உடனடி, நேரடி தகவல் பரிமாற்ற வசதியாக, நமது கைப்பேசி மற்றும் எந்த ஒரு நிறுவனத்தின் வலைப்பின்னலுடன் (நெட்வொர்க்) தொடர்பினை ஏற்படுத்தி, நமது தேவைக்கேற்ற சேவையினை பெற உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில், உதாரணமாக, *99*23#  என்று தொடங்கினால் தமிழ் மொழியில், நமக்குத் தேவையான சேவையினை குறித்து பரிமாற்ற முறையில், தகவல்களை அறிந்து கொள்ள முடியும். என்பிசிஐ நிறுவனம் இதன் வாயிலாக, சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர்களும், இன்டர்நெட்  உதவியின்றி, வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வசதி செய்து தந்துள்ளது.

இன்று பங்கு சந்தை முதல் உழவர் சந்தை வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லாத இடமேயில்லை.  நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட இதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நமது பிறந்த தேதி, பான், ஆதார், கைப்பேசி, வங்கி கணக்கு ஆகியவற்றின் எண்கள்தான் நம்மை அடையாளப்படுத்தும் முகவரி அட்டைகளாகி விட்டன. இவற்றின் மூலம்தான் நமது அனைத்து பரிவர்த்தனைகளும் என்ற நிலையில், அவற்றினை பாதுகாக்க நமக்கு வழங்கப்படும் பின் எண்கள், கடவுச் சொற்கள் போன்றவற்றை பாதுகாத்தால்தான் நமது முகவரி தொலையாமல் இருக்கும். மேலும் அவற்றை, அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டால், சைபர் கிரைம்கள் நடைபெறாமல் தப்பிக்கலாம்.

அடுத்த கட்டமாக இன்று  Crypto Currency என்னும் மெய்நிகர் பணம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நம் நாட்டில் இன்னும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இது, எந்த அடிப்படையில் செயல்படுகிறது என்பது யாராலும் இதுவரை தெளிவாக விளக்கப்படவில்லை. பங்கு சந்தை போன்று, யூக வியாபாரமாகத்தான் பெரும்பாலும் பார்க்கப்படுகின்றது. இதில் ஈடுபடுவது என்பது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில்தான். இதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது, தற்போதைய நிலையில் நன்று.

"நான் கண்டிப்பாக இந்த டிஜிட்டல் முறைகளை உபயோகப்படுத்த வேண்டுமா? பழைய முறையிலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாதா?" என்று ஒரு கேள்வி எழலாம். நிச்சயமாக முடியும். நமக்கு விருப்பமில்லையெனில், யாரும் நம்மை நிர்ப்பந்திக்க முடியாது. என்னவென்றால், சில சந்தர்ப்பங்களில், தாமதங்கள் ஏற்படும். நாம் பின் தங்கியிருப்பதாக உணர்வோம். அதனை விட பாதுகாப்பாய், அவசியத்திற்கு மட்டும் உபயோகிக்க பழகிக் கொண்டால், டிஜிட்டல் மயம் நமக்கு நண்பனாய் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com