திருடப்பட்ட ஐபோனின் ஐடி, பாஸ்வோர்டை தந்திரமாக வாங்கும் ஹைடெக் திருடர்கள்!

திருடப்பட்ட ஐபோனின் ஐடி, பாஸ்வோர்டை தந்திரமாக வாங்கும் ஹைடெக் திருடர்கள்!

ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்கு தெரியும். எப்படி மெயில் ஐடி பயன்படுத்தி, ஆண்ட்ராய்டு போன்களில், பழைய போனில் உள்ள தரவுகளை புதிய போனுக்கு மாற்றுகிறோமோ அதே போல, ஆப்பிள் ஐடி பயன்படுத்தி அதன் உரிமையாளர்கள் எத்தனை சாதனங்களை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். 

இவ்வாறு ஒரே ஐடியில் இணைக்கப்படும் ஆப்பிள் சாதனங்கள் இடையில் ஒருங்கிணைப்பு சீராக இருப்பது மட்டுமல்லாமல், பல சாதனங்களுக்கு இடையே ஃபேஸ் டைம் அழைப்புகள், புகைப்படங்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை மாற்றவும் அனுமதிக்கிறது. இந்த ஆப்பிள் ஐடி அடிப்படையை கொண்ட செயல்பாட்டின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் அதன் பாதுகாப்புத்தன்மை தான். 'ஆக்டிவேஷன் லாக்' என்ற அம்சம் ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே காணப்படும் சிறந்த ஒன்றாகும். 

ஒருவேளை உங்களின் ஆப்பிள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டால், உங்களின் ஆப்பிள் ஐடி பயன்படுத்தி திருடப்பட்ட ஸ்மார்ட்போன் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை உங்களுடைய ஆப்பிள் ஐடி திருடியவர் கையில் சிக்கினால், அதை பயன்படுத்தி உங்கள் போனில் உள்ள தரவுகளை நீட்டமைத்து புதிய போன் போல மாற்றி விடுவார்கள். பின்னர் எளிதாக சந்தையில் அதை விற்றுவிடலாம். 

திருடப்பட்ட ஐபோன், மேக் புக், ஐபேட் போன்றவற்றை மீட்டமைக்க, உங்களுடைய ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் அவர்களுக்குத் தேவை. அது கிடைக்காத பட்சத்தில், தனித்தனியாக பேட்டரி, கேமரா, டிஸ்ப்ளே போன்றவற்றை விற்க முடியுமே தவிர, முழுமையாக ஒரு ஐபோனை விற்க முடியாது. இவ்வாறு தனித்தனியாக போனின் பாகங்களை விற்றால் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு பணமும் கிடைக்காது. 

இப்போதெல்லாம் திருட்டு வேலை செய்வதில் கூட தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து வருகிறது எனலாம். ஃபோனை இழந்தவர்களிடமே போலிய லிங்க் ஒன்றைப் பயன்படுத்தி அவர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பெற்று, ஆப்பிள் சாதனத்தை திருடர்கள் மீட்டமைத்து வருகிறார்கள். 

திருடர்கள் ஒரு ஆப்பிள் சாதனத்தைத் திருடிய உடனே, ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து சிம்மை தூக்கிப்போட்டு விடுவார்கள். இந்நிலையில் போனை பறிகொடுத்தவர் தனது ஐபோன் சாதனத்தைக் கண்காணிக்க Find My செயலி மூலமாக தேடிக் கொண்டிருப்பார். அதேசமயம் பறிகொடுத்த சிம்முக்கு மாற்றாக இன்னொரு சிம்மையும் பெற்றுவிடுவார். 

சில நாட்களுக்குப் பிறகு, அந்த போனில் இருந்த எண்ணுக்கு ஃபோனை மீட்டுத் தருவது போன்ற வலைதள இணைப்புடன் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அவர்கள் அனுப்பும் வலைதள லிங்க்-ம் பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவன இணையதளம் போன்றே தோற்றமளிக்கும். அதில், உங்கள் திருடப்பட்ட ஐபோனைக் கண்டுபிடிக்க உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுமாறு கேட்கும். பாதிக்கப்பட்ட நபரும், எப்படியாவது போன் கிடைத்தால் போதும் என்று தனது ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுவார். 

அவ்வளவுதான், அவர்களுக்குக் கிடைத்த ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, திருடப்பட்ட போனின் ஆக்டிவேஷன் லாக்கை எடுத்துவிட்டு, புதிய போனாக மாற்றி எளிதாக பிறருக்கு விற்று விடுவார்கள். 

எனவே, உங்களுடைய ஐபோன் திருடப்பட்டால்,

  1. உடனடியாக Find My செயலி மூலமாக, உங்கள் சாதனம் Lost எனக் குறிக்கவும். 

  2. அடுத்ததாக இதே செயலியினைப் பயன்படுத்தி உங்கள் போனில் உள்ள தரவுகள் அனைத்தையும் அழிக்கவும். 

  3. பின்னர் காவல் நிலையத்தில் FIR ஒன்று பதிவு செய்யவும். இதை இணையதளம் வாயிலாகவும் நீங்கள் செய்யலாம்.

  4. FIR நகல் மற்றும் போன் உங்களுடையது தான் என்பதன் ஆதாரத்தை மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு அனுப்பவும். 

இதனால் உங்கள் போனின் IMEI எண்ணில், வேறு ஏதேனும் நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். இவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில், உங்கள் சாதனம், வேறு சிம் போட்டு  பயன்படுத்தப்பட்டாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com