நீங்கள் புகைப்பிடித்தால், உங்கள் ஐபோனுக்கு நோ வாரண்டி.
புகைப் பழக்கம் உள்ளவர்களின் ஆப்பிள் சாதனங்களுக்கு வாரண்ட்டி கிடையாது என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
தனது சாதனத்திற்கு வாரண்ட்டி கொடுக்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் கைவிரித்த நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடுத்த போதுதான் விதிகளில் இப்படி ஒரு நிபந்தனை இருப்பது தெரிய வந்தது.
ஐபோன் சாதனங்களை வாங்கும்போது பல கனவுகளுடன் சிறுகச் சிறுக பணத்தை சேர்த்து ஓர் மதிப்புமிக்க பொருளை வாங்கும் உணர்வு அதன் பயனர்களுக்கு நிச்சயம் இருக்கும். பொத்தி பொத்தி பாதுகாப்பாக கையாளுவோம். பலருடைய ஆசைகளையும், கனவுகளையும், நினைவுகளையும் கொண்டிருக்கும் ஆப்பிள் சாதனத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஒரு வாரண்டி நிபந்தனையை, அதன் பயனர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆப்பிள் சாதனங்களுக்கு வாரெண்ட்டி பெற அந்நிறுவனம் பல நிபந்தனைகள் வைத்துள்ளது. அதில் ஒரு முக்கிய நிபந்தனைதான், நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் உங்கள் சாதனத்திற்கு வாரண்ட்டி கிடையாது என்பது.
என்ன, நான் சொல்றத நம்ப மாட்டீங்களா? நம்பிக்கை இல்லன்னா நீங்க வச்சிருக்கும் ஆப்பிள் சாதனத்தோட வாரண்ட்டி கார்டை எடுத்துப் பாருங்கப்பா.
2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் மேக் புக் பயனர் ஒருவர், தனது சாதனம் அதிகமாக சூடாகிறது என அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஒன்றில் பழுது பார்க்கக் கொடுத்துள்ளார். ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் அந்த மேக் புக்கை பழுதுபார்க்க எடுத்த போது, அதில் புகை படிந்திருப்பதை பார்த்துவிட்டு, உங்கள் சாதனத்திற்கு வாரண்டி கிடையாது என்று மறுத்துள்ளார்கள். இதே போல் வேறொருவரின் ஐமேக்கில் புகைப்படிமன் இருந்ததால், அதற்கும் வாரண்டி மறுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இதற்கு காரணம் கேட்டு வழக்கு தொடர்ந்த போதுதான், வாரண்டி விதிகள் சார்ந்த நிபந்தனைகளை ஆப்பிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அபாயகரமான வேதியல் பொருட்கள் பட்டியலில், புகைப்பிடிக்கும் போது வரும் நிக்கோட்டின் பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் சாதனத்தில் புகைப் படிமன் இருந்தால், அதை சரி செய்துத் தர முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதனால், நீங்கள் ஆப்பிள் சாதனங்களைப் பயன் படுத்துபவராக இருந்தால், புகைப் பிடிக்கும்போது அவற்றை சற்று தூரத்திலேயே வைத்திருங்கள். இல்லையேல் நீங்கள் பல நாள் கனவு கண்டு வாங்கிய ஆப்பிள் சாதனங்கள், குப்பைக்கு தான் போய் சேரும். பின்னர் புலம்பி பிரயோஜனம் கிடையாது.
கையில் இருக்கும் ஐபோனை புகையால் நிரப்பிவிட்டு, மீண்டும் புதிய போன் வாங்க லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டுமா என சிந்தித்துப் பாருங்கள். புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சாதனத்திற்கும் கேடாகிவிடப் போகிறது.
முடிந்தவரை புகைப் பழக்கத்தை கைவிடப் பாருங்கள்.