IIT மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்வது மூலமாக, அதை தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப்பொருளாக மாற்ற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத தொழில்நுட்பமாகும்.
இந்த முறையைப் பயன்படுத்தி இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் பண்ணைக் கழிவுகளை எரித்து வீணாக்குவதை குறைக்க, முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர்களுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் கழிவுகளையும் வைத்து பயன்பெற முடியும் என்பதால், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் கெபாசிட்டர்கள் எனப்படும் மின் தேக்கிகளைத் தயாரிப்பதற்கு கார்பன் துகள்கள் பயன்படுத்தப்படுகிறது. இதை உருவாக்குவதற்கு சமையலறையில் உருவாகும் குறிப்பிட்ட கழிவுகள், நெல் கழிவுகள் மற்றும் கரிமக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நெல் கழிவுகளில் இருந்து உருவாகும் 'ஆக்டிவேட்டட் கார்பன்' கெப்பாசிட்டர் உட்பட பல அறிவியல் சார்ந்த விஷயங்களுக்குப் பயன்படுகிறது.
இது நாடு முழுவதும் பல்வேறு விதமான நன்மைகளை வழங்கும் திறனை கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம், CP26 உச்சி மாநாடு, மிஷன் 2070, மாண்ட்ரீல் புரோட்டோகால் மற்றும் கியோட்டோ நெறிமுறைகள் குறித்த பாரிஸ் உடன்படிக்கையின் படி அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை அடைய இது உதவும்.
தற்போது இந்தியாவை எடுத்துக் கொண்டால் நெல் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 760 லட்சம் மேட்ரிக் டன்களாகும். வைகோலை அப்படியே மக்க வைப்பதை விட, அதை எரிப்பது எளிமையாகவும் விலை குறைந்ததாகவும் இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். இது காற்று மாசுபாடு மற்றும் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு செய்வதால் இதுவரை இந்தியாவிற்கு 92,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உயிரிக் கழிவுகளை உயிர்ப் பொருளாக மாற்றுவதையும், ஆக்டிவேட்டட் கார்பனாக மாற்றுவதையும் நிரூபித்துள்ளனர். சூப்பர் கெபாசிட்டர் எலக்ட்ரிக் மெட்டீரியலை உருவாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தால் கார்பன் உற்பத்திக்காக நெல் உற்பத்தியையே மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல் கழிவிலிருந்து உருவாக்கப்படும் ஆக்டிவேட்டட் கார்பனைக் கொண்டு, தண்ணீர் சுத்திகரிப்புக்கும், மருந்து பிரிவு மற்றும் பயோசார் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.