இந்தியாவின் 5G சேவை - பில் கேட்ஸ் புகழாரம்.

இந்தியாவின் 5G சேவை - பில் கேட்ஸ் புகழாரம்.

ற்போது உலக பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 நிகழ்வு ஒன்றில், உலகிலேயே மலிவு விலையில் 5ஜி சேவையை வழங்கும் நாடாக இந்தியா திகழும் என பில் கேட்ஸ் புகழாரம் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 1995 முதல் 2017 வரை முதல் இடத்தில் முடிசூடா மன்னனாக இருந்தார். இதில் 2010 முதல் 2013 வரை அவர் முதலிடத்தில் இல்லை. உலக பணக்காரர் என்றாலே, 'பில்கேட்ஸ்' என்ற பெயர் ஞாபகத்தில் வரும் அளவுக்கு, உலகம் முழுவதும் அறியப்படும் செல்வாக்கு மிக்க நபர் இவர். தற்போதும் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்து ஜொலித்து வருகிறார். 

"இந்தியா, சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இது சிறப்பான விஷயமாகும். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் சதவீதம் அதிகம். இங்கே இணை இணைப்பு அபாரமாகவும், மலிவான விலையிலும் கிடைக்கிறது. இதே நிலைதான் 5G சேவையிலும் தொடரும் என நினைக்கிறேன். உலகிலேயே மலிவு விலையில் கிடைக்கும் 5G சந்தையாக இந்தியா திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என பில்கேட்ஸ் தெரிவித்தார்.

உலகிலேயே இந்தியாவில் தான் இணைய சேவை குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக 1 ஜிபி இணையத்தின் விலை 7 ரூபாய் மட்டுமே. என்னதான் குறைந்த விலைக்கு இணையம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது அது இந்தியாவில் குறைவுதான். 

1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஜனவரி 2022 கணக்கெடுப்பின்படி, வெறும் 47 சதவீத மக்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது நம்முடைய பாதி நாட்டுக்கு, இணைய சேவையே இன்னும் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது.

2022 அக்டோபரில் இந்தியாவில் முதல் முறை 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவை பல நகரங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்களே பல நகரங்களுக்கு 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் மட்டுமே சுமார் 200 நகரங்களுக்கும் மேலாக அதிவேக இணைய சேவையை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் இணைய சேவை பற்றி பில்கேட்ஸ் புகழ்ந்தது, நம்முடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்காலத்தில் இணைய சேவைகளின் நிலை எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com