விவசாயத்தில் IOT தொழில்நுட்பம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

விவசாயத்தில் IOT தொழில்நுட்பம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியான IOT (Internet Of Things) தொழில்நுட்பம் தற்போது விவசாயத்திலும் களம் இறங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி, லாபத்தை அதிகப்படுத்தலாம். 

IOT என்றால் என்ன? 

Internet Of Things இணையம் வாயிலாக பல சாதனங்களை ஒன்றிணைப்பதாகும். இதன் மூலமாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு மென்பொருள் அல்லது செயலி வாயிலாக பல சாதனங்களை நாம் கட்டுப்படுத்தலாம். இதைப் பெரும்பாலும் வீடுகளில் உள்ள விளக்குகள், மின்விசிறி, தானியங்கிக் கதவுகள் போன்றவற்றை ஒரே சமயத்தில் கட்டுப்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள். 

விவசாயத்தில் IOTன் பங்களிப்பு:

ன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மாலையில் மோட்டாரை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டால் காலை வரை தண்ணீர் வயலுக்கு பாய்ந்து கொண்டிருக்கும். அது சில சமயங்களில் வயலையே மூழ்கடித்துவிடும் அல்லது வயலில் தண்ணீர் நிரம்பி வீணாக வெளியே சென்றுவிடும். இது போன்ற பிரச்சனை இனி IOT தொழில்நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தப்படும். 

இதைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பிய உடன், சில கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியோடு, மோட்டாரை நிறுத்த முடியும். அல்லது இத்தனை மணி நேரம் மோட்டார் ஓடினால் போதும் என்பது போல முன்கூட்டியே செட் செய்து தேவையான அளவு நீர் மட்டும் வயலுக்கு பாயும்படி செய்யலாம். இதற்காக பல்வேறு விதமான சென்சார்களையும் சாதனங்களையும் மோட்டாருடன் இணைக்க வேண்டும். கிட்டத்தட்ட 50 முதல் 75 சதவீதம் வரை விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் பயன்பாட்டை குறைத்து, அதிகப்படியான தண்ணீர் வீணாவதை இது தடுக்கிறது. 

இதுவரை வயலில் ஊட்டச்சத்துக்கள் குறைவதை விவசாயிகள் கண்டுபிடித்து உரத்தைப் போடுவது மிகவும் கடினமாக இருந்தது. தற்போது IOT தொழில்நுட்பம் மூலமாக எதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்பதைக் கணக்கீடு செய்து, அதற்கு ஏற்றவாறு தானாகவே உரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையையும் இது மூலம் செயல்படுத்த முடியும். இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பயிர்கள் அழிவதைத் தடுக்கலாம். 

மேலும், இதைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, எதுபோன்ற பயிர் வகைகளைப் பயிரிடலாம், எப்படி விளைச்சலை மேம்படுத்தலாம் என முக்கிய முடிவுகளை மிகவும் துல்லியமாக எடுக்கலாம். தற்போது பல்வேறு வகையான ட்ரோன்கள் நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி தெளிப்பு உரம் தெளிப்பு, பயிர் கண்காணிப்பு, பயிர்வளம் மதிப்பீடு, மண் மற்றும் கலப்பகுப்பாய்வு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப் படுகிறது. இதனால் இருந்த இடத்திலிருந்து கொண்டே பயிர்களின் வளத்தை நன்றாக கண்காணிக்க முடியும். 

தற்போது IOT-ன் பங்களிப்பு விவசாயத்துறையில் அதிகரித்து வருகிறது. பல வகைகளில் பயிர் வளத்தை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும், பயிரின் தன்மையை எளிதாக ஆராய்ச்சி செய்து சிறந்த திட்டமிடலில் இது முக்கிய பங்காற்றுகிறது. தற்போது வளர்ந்து வரும் IOT தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பேருதவி புரிவது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com