Google நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன்: AI தொழில்நுட்பத்தின் தந்தை மக்களுக்கு எச்சரிக்கை.

Google நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன்: AI தொழில்நுட்பத்தின் தந்தை மக்களுக்கு எச்சரிக்கை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகக் கூறி, AI தொழில்நுட்பத்தின் கடவுளாகப் போற்றப்படும் Geoffrey Hinton கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். 

தற்போது AI தொழில்நுட்பமானது உலக அளவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. பல முன்னணி டெக் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த எண்ணி, பல மில்லியன் டாலர்களை இதற்காக செலவழித்து வருகின்றனர். அதில் ஒரு நிறுவனமான கூகுளில் பணியாற்றிய, AI தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படும் 'ஜியோப்ரி ஹிண்டன்', அந்த நிறுவனத்திலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். எதிர்காலத்தில் இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இப்போதே இது சார்ந்த ஆராய்ச்சியிலிருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். 

ChatGPT என்ற தொழில்நுட்பத்தை OpenAI நிறுவனம் உருவாக்கியது. இதற்கு போட்டியாக நாங்களும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று, Bard என்கிற சாட் பாட்டை கூகுள் நிறுவனம் உருவாக்கியது. கூகுளின் இந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்தவர் Geoffrey Hinton. ஒருவேளை நான் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், வேறு யாராவது கண்டுபிடித்திருப்பார்கள். இது நமக்கும் நமது சமூகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

AI தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? 

  1. பலரின் வேலைவாய்ப்பு பறிபோகும்: இப்போதே பல நிறுவனங்களில் மனிதர்களுக்கு பதிலாக ஏஐ டூல்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதேபோல மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கிவிட்டால், பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

  2. தவறான தகவல்கள் பரப்பப்பட வாய்ப்புள்ளது: இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கும் தகவல்களை வைத்துதான் செயல்படுகிறது என்பதால், மனிதர்களைப் போல இதனால் அவ்வப்போது சிந்தித்து செயல்பட முடியாது. எனவே பல துறைகளில் தவறான தகவல்களை உருவாக்கவும், பரப்பவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

  3. மனிதர்களைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது: ஒருவேளை எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இது மனிதர்களின் அளவுக்கு சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற்றுவிட்டால், மனிதர்களையே அடிமைப்படுத்த வாய்ப்புள்ளது.  

மேலும் இதுகுறித்து Geoffrey Hinton கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, தற்போது இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. இதுவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது எந்த அளவுக்கு வளர்ச்சியை பெரும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

இவ்வாறு இந்த தொழில்நுட்பம் உருவாவதற்கு காரணமாக இருந்தவரே இதைப் பற்றி பயப்படுவதாகக் கூறி கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், உலகளவில் மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com