ஸ்பேம் கால் (Spam Call) தொல்லை இனி இல்லை!

ஸ்பேம் கால் (Spam Call) தொல்லை இனி இல்லை!

TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஏர்டெல், ஜியோ, விஐ பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்கும் சேவையைக் கொண்டுவந்துள்ளது. 

நாம் ஏதாவது ஒரு முக்கிய வேலை செய்து கொண்டி ருப்போம் அல்லது ஏதேனும் ஒரு முக்கிய நபரின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, "குறுக்க இந்த கௌஷிக் வந்தா" என்பது போல பல விதமான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள் வந்து நம்மை எரிச்சலூட்டும்.

டெலி ஷாப்பிங், கிரெடிட் கார்டு, மார்க்கெட்டிங், கடன் கொடுத்தல், மோசடி அழைப்புகள் போன்றவை நம் நேரத்தையும் மனநிலையையும் மொத்தமாக சுக்குநூறாக்கிவிடும். மோசடி செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கி ஊழியர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டு, "கார்டு மேல இருக்குற 16 நம்பர் சொல்லு சார்" என்று கேட்டு, நம் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பண மோசடி செய்கிறார்கள். இதனால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது நீங்களே கூட பாதிக்கப்பட்டிருக்கலாம். 

என்னதான் ஸ்பேம் அழைப்புகள் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அவற்றை சாதாரணமாகப் புறக்கணித்து விடுவது மட்டும் நமக்கு நிரந்தரத் தீர்வாகாது. சிலர் ஸ்பேம் அழைப்பை பார்த்தவுடன் அழைப்பை ஏற்க மாட்டார்கள், அல்லது சிலர் சைலன்ஸ் மோடில் போட்டு விடுவார்கள். இப்படி செய்வதால் அவ்வப்போது உங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகள் நிற்கப்போவது கிடையாது. 

இதற்காகவே ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்க, TRAI ஒரு சிறப்பு சேவையைக் கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் DND சேவையை ஒருவர் செயல்படுத்தினால், ஸ்பேம் கால்கள் மட்டுமல்லாமல், வங்கி அழைப்புகள், ஆன்லைன் டெலிவரி அழைப்புகள் போன்றவையும் தடை செய்யப்படும். தற்போது புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள சேவையில், மூன்றாம் தரப்பு வணிக அழைப்புகளை மட்டுமே குறிப்பிட்டு தடுக்க முடியும். 

இந்த சேவையை எப்படி இயக்குவது?

* அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் பொதுவாக செயல்படும் வகையில், SMS வாயிலாக இதை செயல்படுத்தலாம். 

* முதலில், உங்கள் SMS பகுதிக்கு சென்று START என டைப் செய்து கொள்ளுங்கள். 

* அடுத்ததாக, 1909 என்ற எண்ணுக்கு இந்த செய்தியை அனுப்ப வேண்டும். 

* உங்கள் சேவை வழங்குநர் எந்த வகையான அழைப்புகளை தடுக்க விரும்புகிறீர்கள் எனும் பட்டியலை அனுப்புவார்.

* பின்னர், நீங்கள் எது தொடர்பான அழைப்புகளைத் தடுக்க விரும்புகிறீர்களோ, அது சார்ந்த குறியீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக சுகாதாரம், ரியல் எஸ்டேட், கல்வி போன்ற பல வகையில் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

* இதில் நீங்கள் தடுக்க விரும்பும் குறியீட்டை தேர்வு செய்து, 1909 என்று எண்ணுக்கு அனுப்புவதால், தேவையில்லாத ஸ்பேம் அழைப்புகளிலிருந்து நீங்கள் விடுபடலாம். 

* உங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர், உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் செய்தியை திருப்பி அனுப்புவார்.

* இறுதியில், 24 மணி நேரத்திற்குள் DND சேவை உங்கள் மொபைல் எண்ணில் தொடங்கப்படும். 

இந்த சேவை மூலமாக பயனர்கள், தேவையில்லாத அழைப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான மோசடி கும்பல்களிடமிருந்தும் தப்பிக்க முடியும். இதை அனைவரும் உங்கள் போனில் இன்றே செயல்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com