WhatsApp-ல் விரைவில் அறிமுகமாக இருக்கும் True Caller சேவைகள்.

WhatsApp-ல் விரைவில் அறிமுகமாக இருக்கும் True Caller சேவைகள்.

ஸ்பாம் அழைப்புகளை தவிர்க்கும் விதமாக வாட்ஸ் அப் செயலியிலும் விரைவில் ட்ரூ காலர் சேவை அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரூ காலர் நிறுவன சிஇஓ ஆலன் மாமேடி, தங்களின் சேவைகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட மெசேஜ் அனுப்பும் சில செயலிகளில் விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த வசதியானது தற்போது சோதனை முயற்சியில் உள்ளதால், மே மாத இறுதிக்குள் இது உலகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

என்னதான் அதிவேக தகவல் பரிமாற்றத்திற்கு ஸ்மார்ட் போன்கள் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், தற்போது இது ஒரு முழுமையான வணிக நோக்கமாக மாறியுள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்து மிகப்பெரிய வீட்டையே வாங்கும் வரையில் பல விளம்பரங்கள் மற்றும் அதற்கான நபர்களை ஸ்மார்ட்போன் மூலம் தான் நிறுவனங்கள் பயனர்களை அணுகுகின்றனர். இதில் ஒரு சில அழைப்புகள் தேவையானதாக இருந்தாலும் பெரும்பாலானவை நம்மை எரிச்சலூட்டும் வகையிலேயே அநாவசியமாக இருக்கிறது. 

நம்மை யார் அழைக்கிறார் என்று தெரியாத சூழலில் நமக்கு வரும் அனைத்து புதிய அழைப்புகளையும் நாம் எடுத்து பதிலளிக்கும் நிலை இருந்து வந்தது. அப்போதுதான் ட்ரூ காலர் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டு, புதிய அழைப்புகளிலிருந்து வரும் எண் யாருடையது என்பதை தெரிவிக்கும் வசதியை பயனர்களுக்குக் கொடுத்தது. சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி, உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 35 கோடி பயனர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 25 கோடி பேர் இந்தியர்கள் தான். 

உலகம் முழுவதும் சந்தாதாரர்கள் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனம் வருமானம் ஈட்டி வந்தாலும், அனாவசிய அழைப்புகளை தவிர்ப்பதற்கு உதவுவதால், இந்தியர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சூழலில் தற்போது சாதாரண அழைப்புகளைத் தாண்டி இணையத்தில்  மேற்கொள்ளப்படும் அழைப்புகளிலும் தற்போது ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துவிட்டது. ஒரு மாதத்திற்கு சராசரியாக 17 தேவையில்லாத அழைப்புகளை ஒவ்வொரு பயனரும் பெறுவதாக ட்ரூகாலர் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.  

சமீப காலமாக whatsapp உள்ளிட்ட மெசேஜ் செயலிகளில் ஸ்பேம் அழைப்பு அதிகரித்துள்ளதால், வாட்ஸ் அப் செயலியில் அழைப்பு மேற்கொள்பவரை அடையாளம் காண்பதற்காக ட்ரூ காலர் நிறுவனத்தின் சேவைகள் விரைவில் இதில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com