இதுவரை ஆற்றலை சேமிக்க பல்வேறு விதமான பேட்டரிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் மணலை வைத்து பேட்டரி உருவாக்கலாம் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? உலகிலேயே முதன்முறையாக பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், முழுமையாக செயல்படக்கூடிய மணல் பேட்டரி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பயன்படுத்தி பல மாதங்களுக்கு வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கலாமாம்.
பொதுவாக பேட்டரி என்பது ஆற்றலை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். நாம் நம்முடைய வீடுகளிலும் வாகனத்திலும் பயன்படுத்தும் பேட்டரிகளில் மின்சார ஆற்றலை சேமித்து வைத்திருப்போம். ஆனால் பின்லாந்து நாட்டில் முதல்முறையாக வெப்பத்தை பல மாதங்களுக்கு சேமித்து வைக்கும் மணல் பேட்டரி வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை பயன்படுத்தி குளிர்காலம் முழுவதும் வீடுகளை சூடாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக நீடித்த வெப்பத்தை நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். காற்றாலை அல்லது சூரிய சக்தி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, 100 டன் மணலை சூடாக்கி இந்த பேட்டரியில் சேமிக்கலாம்.
உங்க மைண்ட் வாய்ஸ் என்ன கேட்கும்னா, "மணலை சூடாக்க பயன்படுத்தும் மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது பேட்டரியில் சேமித்து, குளிர் காலத்தில் ஹீட்டரில் ஏன் பயன்படுத்தக் கூடாது?" உங்களுடைய சிறு மூளையும் பெரு மூளையும் கிரிமினல் மாதிரி யோசிக்கும். அப்படித்தானே?
ஆனால் மின்சாரத்தை பேட்டரியில் சேமிப்பதை விட, வெப்பத்தை மணல் மூலமாக சேமிப்பது மிகவும் எளிது. அதிலும் ஒரு முறை சேமிக்கப்பட்ட மணல் பேட்டரி யிலிருந்து, ஒரு குளிர் காலத்தைக் கடத்தும் அளவிலான வெப்பத்தை எளிதாகப் பெற்றுவிடலாம். இதுவே மின்சாரமாக பயன்படுத்தும் போது அதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம்.
மணல் பேட்டரி என்றால் என்ன?
மணலை சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்தி, மின்சாரத்தை வெப்பமாக மாற்றி, பின்னர் தேவைப் படும்போது பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கும் சாதனம்தான் 'மணல் பேட்டரி'. இது பாதுகாப்பான அதேசமயம் இயற்கையான ஒன்றாகும். இதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் கூட இயற்கையாகக் கிடைத்ததுதான். அதேசமயம் மணலானது 1000 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பமாகும் தன்மை படைத்தது. விலை குறைவாகவும் அதிக அளவிலும் எளிதாக கிடைக்கக்கூடியது.
தன்னைத் தானே 'Innovator of Seasonal Heat Storage' என்று அழைத்துக் கொள்ளும், Polar Night Energy என்ற நிறுவனத்தால் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் காற்றாலை மற்றும் சோலார் மூலம் உருவாக்கப்படும் மின்சாரம் 100% பயன்படுத்தப்படும் தன்மையை அடைகிறது என்கிறார்கள். முதல் முறை பின்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியானது, மொத்தம் 100kW வெப்ப ஆற்றலும் சேமிக்கும் 8MWh திறன் கொண்டதாகும்.
இந்த மணல் பேட்டரியின் உள்ளே வெப்பத்தை சேமிக்க சிறப்பான கட்டமைப்புகள் உள்ளன. சேமிக்கப்படும் வெப்பம் வெளியே செல்லாதவாறு நல்ல முறையில் இன்சுலேஷன் செய்யப்பட்டிருக்கும். என்னதான் மணலின் வெப்ப ஆற்றல் காலப்போக்கில் குறையுமென்றாலும், பேட்டரியின் கோர் எனப்படும் நடுப்பகுதியிலுள்ள மணலின் வெப்பம் அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது.
எனவே குறைந்த செலவில் வெப்ப ஆற்றலை சேமிக்க, இந்த மணல் பேட்டரியைப் பயன்படுத்தலாம்.