என்னது! ChatGPT பயன்படுத்தி உளவு பார்க்கலாமா?

என்னது! ChatGPT பயன்படுத்தி உளவு பார்க்கலாமா?

ChatGPT AI தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய இணையப்புரட்சி நடந்திருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்தி உளவு கூட பார்க்கலாம் என்ற விஷயம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது. 

கூகுளுக்கு இணையாக உலக மக்களால் ChatGPT தற்போது பயன்படுத்தப்படுகிறது. இணையத்தில் அடுத்த நகர்வாகவே இதை உலகம் கொண்டாடி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒருவரின் வேலையை மிகவும் விரைவாக செய்வதற்கு பயன்படுவதால் பலரும் இதனை புகழ்ந்து வருகிறார்கள். நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத வேகத்தில் ChatGPT-ஆல் வேலை செய்ய முடியும். வீடியோ எடிட்டிங், வாய்ஸ் ஓவர், வீடியோ மேக்கிங், கோடிங் செயலி உருவாக்கம், வெப் டெவலப்மெண்ட் உள்ளிட்ட பல துறைகளில் ChatGPT எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

இதை அறிந்துதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் அவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டு பல சோதனைகளை செய்து வருகிறார்கள். தற்போது அவர்களின் Bing பிரவுசரில் AI தொழில்நுட்பத்தை இணைத்து சோதனை முறையில் கண்காணித்து வருகிறார்கள். இதில் வரும் நிறை குறைகளைப் பயன்படுத்தி தங்களுக்கே பிரத்தியேகமான AI தொழில்நுட்பத்தை உருவாக்கவும் இருக்கிறதாம் மைக்ரோசாப்ட். உலகில் பல முன்னணி நிறுவனங்களும் தற்போது AI தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள். 

இது ஒரு புறம் இருக்க, ChatGPT பயன்படுத்தி உளவு பார்க்கலாம் என்ற தகவல் டெக் உலகினரை கதிகலங்கச் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டால் தேச பாதுகாப்பு என்னவாகும்?. தற்போதே உளவு பார்ப்பதற்கு இதை சிலர் பயன்படுத்து கிறார்கள் எனும் நிலையில், அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதற்கான பதில் நிபுணர்களிடம் இல்லை. 

Open AI நிறுவனம் தற்போது வரை இணையதளம் வாயிலாக தான் அவர்களுடைய சேவையை வழங்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான நபர்கள் மொபைல் போன் ஆப் பயன்படுத்துவதால், இதை அறிந்த ஹேக்கர்கள் Fake ChatGPT செயலிகள் மூலமாக பல நபர்களின் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வைரஸ் பதிவேற்றம் செய்து அவர்களின் உள்ளடக்கங்களைத் திருடி வருகிறார்களாம். இதில் மக்களும் போலியான App-களை உண்மை என்று நம்பி ஏமாந்தும் விடுகிறார்கள்.  

மேலும், சில திருடர்கள், அந்த நிறுவனத்தின் வலைதளம் போலவே இன்னொன்று உருவாக்கி அதன் மூலமாக பயனர்களை உள்ளே வரவைத்து, ChatGPT Pro பயன்பாட்டிற்காக பயனர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று லாவகமாக பணத்தை அபேஸ் செய்து விடுகிறார்களாம். 

தற்போது ChatGPT-ன் எல்லை என்னவென்பதை யாரும் தீர்மானிக்க முடியவில்லை. நாம் நினைப்பதை விட தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் இதனால் ஏற்படும் என்றும், கோடிக்கணக்கான நபர்களின் வேலைக்குக் கூட இதனால் ஆபத்து ஏற்படலாம் என்றும் பலர் கூறி வருகிறார்கள். 

எனவே மக்கள் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் தங்கள் விவரங்களை எந்த வலைதளத்திற்கும் வழங்காமல் இருப்பதே நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com