பெற்றோரால் கடத்தப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெற்றோரால் கடத்தப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரால் கடத்தப்பட்ட இளம் பெண் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காப்பகத்தில் 3 நாட்கள் தங்கவைத்து வாக்குமூலம் பெற போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (22). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட குருத்திகா பட்டேல்(22). இலஞ்சி தென்றல் நகரில் வசிக்கிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் , இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27.12.2022-ல் நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்:

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறேன். இலஞ்சி தென்றல் நகரில் வசிக்கும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நவீன்பட்டேல் மகள் குருத்திகா பட்டேலும்(22) நானும் நாகர்கோவிலில் கடந்த 27.12.2022-ல் திருமணம் செய்து கொண்டோம்.

நானும், என் மனைவி (குருத்திகா பட்டேல்) யும் கடந்த மாதம் 14-ம் தேதி தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம். அப்போது குருத்திகாவின் பெற்றோர் நாங்கள் அங்கு வந்திருப்பதை தெரிந்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து என்னை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவேன் என மிரட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக நான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினேன். அது குறித்த விசாரணைக்காக என்னை குற்றாலம் காவல் நிலையத்துக்கு வரும்படி எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்கள். நானும் என் மனைவியும் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு கொட்டாகுளத்துக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்போது இலஞ்சி அருகே மற்றொரு காரில் எங்களை பின்தொடர்ந்து வந்த நவீன் பட்டேல், அவரது மனைவி தர்மிஸ்தா பட்டேல் மற்றும் அவரது ஆட்கள் என்னை தாக்கிவிட்டு என் மனைவி குருத்திகாவை கடத்திச் சென்றனர். குருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது குருத்திகா பட்டேலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் தரப்பில், குருத்திகாவிடம் விசாரணை நடத்தி கடத்தல் சம்பவத்தின் உண்மையைக் கண்டறிய வேண்டி உள்ளது. இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், குருத்திகாவிடம் அவருக்கும் மனுதாரருக்கும் திருமணம் நடந்ததற்கான புகைப்படங்களைக் காண்பித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து குருத்திகாவை குஜராத்தில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் மைத்ரிக் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ளாரா? அவருக்கும் குருத்திகாவுக்கும் குஜராத்தில் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் நடந்ததாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கூறினர். 

இதன்பின்னர் நீதிபதிகள், குருத்திகா வழக்கில் தனிப்பட்ட செல்வாக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இதனால் குருத்திகாவை 3 நாட்கள் காப்பகத்தில் தங்க வைத்து போலீஸார் அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற வேண்டும். என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், குருத்திகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை பெற்றோர் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையை பிப். 13-ல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

குருத்திகா கடத்தப்பட்டது தொடர்பாக குற்றாலம் போலீஸார் அவரது பெற்றோர் நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நவீன் பட்டேல் உட்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் வினித் மற்றும் அவரது குடும்பத்தினரை குருத்திகாவின் பெற்றோர் மற்றும் அவரது ஆட்கள் கடுமையாகத் தாக்கியதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com