பிகார் அரசு விளம்பரத்தில் தேஜஸ்வி மிஸ்ஸிங் முதல்வர் நிதிஷ்குமாரின் சதியா?

பிகார் அரசு விளம்பரத்தில் தேஜஸ்வி மிஸ்ஸிங்
முதல்வர் நிதிஷ்குமாரின் சதியா?

பிகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி துணை முதல்வர் தேஜஸ்வியை ஓரங்கட்டி வருவதாக கூறப்படுகிறது.

பிகார் மாநில சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அரசு விளம்பரத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. வழக்கமாக அரசு விளம்பரங்கள் வெளியிடும்போதெல்லாம் அதில் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வினி யாதவ் ஆகிய இருவரின் படங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒன்றைரை நிமிட விடியோவில், நிதிஷ்குமாரை புகழ்ந்து தேஜஸ்வி பேசும் காட்சிகள் சில விநாடிகள் வெளியாகியுள்ளன. லாலு யாதவும், தேஜஸ்வி யாதவும் சமீபத்தில் நிதிஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு வந்த நிலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு உள்பட சில விவகாரங்கள் குறித்து லாலு கட்சியின் செயல்பாடுகளில் நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லல்லன் சிங், ஐக்கிய ஜனதாதளத் தலைவராக இருந்தபோது தேஜஸ்வி யாதவ், முதல்வர் பதவியை பிடிக்க முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் அமைப்பாளர் பதவிக்கு நிதிஷ்குமாரை லாலு ஆதரிக்க முன்வராததால் நிதிஷ் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப விரும்பினால் பா.ஜ.க. அதை பரிசீலிக்க தயார் என்று சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதனால், நிதிஷ்குமார் மீண்டும் அணிமாறக்கூடும் என்று வதந்திகள்கூட உலாவந்தன. நிதிஷ்குமாருக்காக கூட்டணிக் கதவுகள் மூடப்படாமல் உள்ளன என்று அமித்ஷா கூறியதை ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் இடையே எந்த விரிசலும் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் கூறிவருகிறார். உண்மை நிலை என்னவென்று தெரியாமல் சிலர் கூட்டணி முறிந்துவிட்டதுபோல் பேசுவது வருத்தமளிக்கிறது. மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்போது முடியும் என்பதை அறிய ஆர்வம் காட்டும் சிலர், தேசிய ஜனநாயக கூட்டணியின்   நிலைமை என்ன என்பது  பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.

முன்னர் தேஜஸ்வியை வருங்கால முதல்வர் என குறிப்பிடும் போஸ்ட்ர்கள் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தொண்டர்களால் ஓட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com