அரசியல் கணிப்பில் கெட்டிக்காரர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

Revanth Reddy
Revanth Reddy
Published on

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததையடுத்து முதல்வராக பதவியேற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இவர் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் அதாவது இப்போது உள்ள பாரத் ராஷ்ட்ர சமிதியில் இணைந்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.

தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு குறைகிறது என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு தெரியும் முன்னரே அதை உணர்ந்துகொண்ட ரேவந்த் ரெட்டி,  சரிவை முன் கூட்டியே கணித்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்.

இத்தனைக்கும் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவராக இருந்தார். இருப்பினும் சந்திரபாபு நாயுடுவிடம் வெளிப்படையாக தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசி எந்த ஒரு மனஸ்தாபமும் இன்றி தெலுங்கு தேசத்திலிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பிற அரசியல் தலைவர்களுக்கு ஏற்றவாறு செயல்படும் திறமைமிக்கவர் ரேவந்த் ரெட்டி. செல்வாக்கு இழந்த அரசியல் தலைவர்கள் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் ரேவந்த் ரெட்டி,  தனது அரசியல் எதிர்காலத்தை தெள்ளத் தெளிவாக முடிவு செய்தவர்.

30 வயதாக இருக்கும் போதே இவர் ஜூப்ளி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியின் தலைவரானார். இங்குதான் தெலங்கானாவின் செல்வாக்கு மிக்க மனிதர்களும் செல்வந்தர்களும் வாழ்கின்றனர். 2007-ல் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை எம்.எல்.சி.யாக நின்று வெற்றி பெற்றார். இதற்கு ஓராண்டுக்கு முன்னர்தான் ஜில்லா பரிஷத்திலும் வெற்றி பெற்றார் ரேவந்த். தேர்தல் உத்திகளை  வகுப்பதில் வல்லவர்.

தெலங்கானாவின் அனைத்து பெரிய கட்சிகளிலும் இவர் இருந்ததால் எல்லா கட்சிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரேவந்த், கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேர்ந்ததுடன் அந்த கட்சியை தெலங்கானாவில் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இவரது வளர்ச்சியைக் கண்டு சக காங்கிரஸ் தலைவர்களே வியப்படைந்தனர்.

2009-ல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014-லும் அதே தொகுதியில் நின்று வென்றார். ஆனால் 2018-ல் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பிறகு மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் நின்று மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2017-ல் காங்கிரஸில் இணைந்த இவர், 2021 இல் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.  6 ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து இப்போது முதல்வர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வளர்ச்சியைப் போலவே ரேவந்த்தின் வளர்ச்சியும் ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது. சித்தராமையா, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் கர்நாடக மாநில முதல்வரானது பலரும் அறிந்த விஷயம்.

ரேவந்த் ரெட்டியை ‘ரேவந்த் அண்ணா’ என்றே கட்சித்தொண்டர்கள் செல்லமாக அழைக்கின்றனர். மிகவும் ஆக்ரோஷமானவர் என்று பெயர் எடுத்தவர் ரேவந்த். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் உறவினரான கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் ரேவந்த் ரெட்டி. இவர்களுக்கு நிமிஷா என்ற மகள் இருக்கிறார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. அதுவும் கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. தான் ஒரு மாரடோனா விசிறி என்று சொல்லிக் கொள்வார்.அடுத்த 5 ஆண்டுகளில் தெலங்கானாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்போவதாக சபதம் ஏற்றுள்ள ரேவந்த் ரெட்டி சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com