தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்..!

hot sun
hot sun
Updated on

தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைக் கடந்து பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. ஈரோடு 106, திருச்சி, கரூர் பரமத்தி 105, திருப்பத்தூரில் 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 102.2 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2-3 டிகிரி அதிகம். இதனால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ஈரோடு, சேலம், திருத்தணி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் 4ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பே வெயில் கொளுத்துகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் வாட்டி வருகிறது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே வெயில் சதம் அடித்து உளளதால் பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்களை நாடி வருகின்றனர்.

ஆனால் வாட்டி எடுக்கும் வெயிலுக்கு மத்தியில் சில இடங்களில் பெய்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் திடீரென சுழன்றடித்த சூறைக்காற்று, கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது அடிக்கும் வெயிலுக்கு சற்று ஆறுதலாக இருந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சில இடங்களில் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சதம் அடித்து வருவது தமிழக மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com