மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ளது பெலேஷ்வர் மகாதேவ் கோயில். இந்தக் கோயிலில் இன்று ஸ்ரீராம நவமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் வந்து ஸ்வாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அப்பொழுது திடீரென கோயில் கிணற்றின் படிக்கட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் இருபத்து ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்து விட்டனர்.
தண்ணீர் அதிகம் இல்லாத இந்தக் கிணறு 40 முதல் 50 அடி ஆழம் கொண்டது. இந்த விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோர் கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த விபத்தில் பதினொரு பேர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கிணற்றில் மேலும் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து, மத்திய பிரதேச முதல்வர் எஸ்.எஸ்.சௌஹான், ‘இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிணற்றில் சிக்கி உள்ளவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என்று கூறி உள்ளார்.