கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி!
Published on

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதி ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். கல்லூரியில் படித்துவந்த இவர் சுவாதி என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணை மூலம் அறியப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கைதான சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரும், தங்களது ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

அதேபோல், இந்த வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயும் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கியமான சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பிறழ் சாட்சி அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, ‘தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை’ என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக’ நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை போன்றவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. மேலும், ‘யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்’ என்று கூறிய உயர் நீதிமன்றம், ‘ஐந்து பேரின் விடுதலையில் தலையிட முடியாது’ என்றும் கூறி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com