மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான டெண்டர் மற்றும் டிசைனை ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ளது.ஒன்றிய பாஜக அரசு 2015 ஆம் ஆண்டு மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு பணிகள் தொடர்ந்து கால தாமதமானது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியதோடு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதன் பிறகு இது தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினையாகவும் மாறியது.
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எங்கே மதுரை எய்ம்ஸ் என்ற பிரச்சாரம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மேலும் உதயநிதி ஸ்டாலின் செங்கல் பிரச்சாரமும் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.மேலும் தற்போது நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் மற்றும் டிசைன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ஆரம்பத்தில் 1264 கோடி செலவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை முன்னெடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தொடர்ந்து நிதி தேவை அதிகரித்து வருவதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் பணி அறிவிக்கப்படும் பொழுது ஜெய்கா நிறுவனத்தின் 82 சதவீத நிதியோடு இந்த பணி தொடங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.