

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். பின்னர் தனது X பக்கத்தில் தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் குறித்து ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார்.
அதில் " தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் (தவெக) தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!"
என்று தொடங்கி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அங்கு ஆய்வு செய்து இருந்ததையும் குறிப்பிட்டு இருந்தார்.
தொல்லியல் துறை மலையடிப்பட்டியில் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்று தடங்களை கண்டறிய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது வரலாற்றினை ஆய்வு செய்ய முயற்சியில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ளது.
தமிழினத்தின் நாகரிக தொன்மையையும் நீண்ட நெடிய வரலாற்றையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக , மண்ணுக்கு கீழே மறைந்திருந்த பல வரலாற்று சான்றுகள் தற்போது கண்டறியப்பட்டு வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மலையப்பட்டியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிக்கு சென்று , பணிகளை ஆய்வு செய்தார். அங்கு கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் வரலாற்று சான்றுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
அந்தப் பகுதியில் பழமையான செங்கல்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகளைக் கொண்ட கிணறு தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. மேலும் அங்கு கிடைத்த பழமையான பொருட்கள் கீழடியில் கிடைத்த ஆதாரங்களுக்கு இணையாக இருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அங்கு கலைநயம் மிக்க கண்ணாடி மணிகள் , பழங்கால பல்வேறு ஆயுதங்கள் , கருப்பு சிவப்பு வண்ணங்களை கொண்ட பானை ஓடுகள் ஆகியவையும் கிடைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து அந்த கால மக்களின் வாழ்வியல் முறைகளையும் நாகரிக தன்மைகளையும் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
இது குறித்து தனது x பக்கத்தில் தங்கம் தென்னரசு பகிர்ந்துள்ள பதிவில் "தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன்.
மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் கண்டுபிடிப்பு, இப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.
வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ் நிலப்பரப்பின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.