

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான பெரிய கருப்பன் 5 வது முறையாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக K.புதுப்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க அவர் சென்ற போது உள்ளூர் மக்கள் இணைந்து அவரை சிறை பிடித்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் அவரது காரை சுற்றிக்கொண்டு இருபுறமும் போகவிடாமல் தடுத்து , அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த கிராம மக்கள் அமைச்சர் பெரிய கருப்பனின் ஆதரவாளர்களால் , உள்ளூரில் விமரிசையாக நடத்தப்படும் மலையாள சாத்தையா கோயில் மஞ்சுவிரட்டு தடைப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்கள். "உங்களது ஆதரவாளர்கள் தான் கோர்ட் வரைக்கும் சென்று எங்கள் கோயில் மஞ்சுவிரட்டு நடைபெறாமல் செய்துவிட்டனர். எதை வைத்து வாக்கு கேட்பதற்காக எங்கள் ஊரில் வந்து உள்ளீர்கள்? " என்று கேள்விகளால் துளைத்தனர்.
இதனால் , காருக்குள்ளேயே முடங்கிய அமைச்சரை , காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மீட்டுச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரிய கருப்பன் வாக்கு சேகரிக்காமல் திரும்பி சென்று உள்ளார்.