துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்:கட்டடங்கள் குலுங்கின; பலியானோர் எண்ணிக்கை என்ன?

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்:கட்டடங்கள் குலுங்கின; பலியானோர் எண்ணிக்கை என்ன?
Published on

துருக்கி நாட்டில் காசியானதெப் என்னும் இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. ரிக்டர் அளவுகோலில் 7.8 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் பூமியின் 17.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கத் தகவல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், துருக்கி-சிரியா எல்லைப் பகுதி அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிட நேரத்தில் கட்டடங்கள் பலமாகக் குலுங்கின. வீடுகள் பலவும் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பதினைந்தாவது நிமிடங்களில் இன்னொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 6.7 எனப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 189 பேர் உயிரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். பல கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளதால் தோண்டத் தோண்ட பிணக் குவியல்களாகவே உள்ளதாம். அதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அதிகாலையில் இந்த கோர சம்பவம் நடைபெற்றதால் பலர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளது நெஞ்சை பிழிய வைப்பதாக உள்ளது. இந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாடு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த பூமி அதிர்வின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்று அடிக்கடி துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை மிகவும் அச்சமடைய வைத்துள்ளது.

இதுபோன்று கடந்த 1999ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் பலியாகி உள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியது. இதில் தலைநகர் இஸ்தான்புல்லில் மட்டும் ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் பலியாகினர். இது ரிக்டர் அளவுகோலில் 6.8 எனப் பதிவானது. கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரை விட்டனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 7.0 எனப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் குறித்து, துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இதுவே ரிக்டர் அளவுகோலில் அதிகமாகப் பதிவான நிலநடுக்கம் ஆகும். ஆகவே, உயிர்ச்சேதமும் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com