செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்துள்ளது லட்சுமிபுரம். இங்கு தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை அதன் தரம் பிரித்து விற்பனை செய்து வரும் இந்தப் பிளாஸ்டிக் குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எளிதில் தீ பிடிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவி அந்தப் பகுதி முழுவதும் தீயோடு கரும்புகையும் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றனர். தீ கட்டுக்குள் வராததால் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பிளாஸ்டிக் குடோனின் ஒரு பகுதி தடுப்பு சுவரை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி செயல்பட்டு வருகிறது.

இந்த பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிலாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் இந்த குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. குடோனில் ஏற்பட்ட தீ முழுவதும் அணைக்கப்பட்ட பின்னரே தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில், குடோனின் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com