டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சிறுமி மீது ஆசிட் வீசினர். இதில் மாணவியின் முகம், கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, ஆசிட் வீசிய இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தமது வீட்டில் இருந்து பள்ளிக்கு அந்த சிறுமி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பைக்கில் வந்த இருவர் அவர் மீது அமிலம் போன்ற பொருளை வீசியுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த பொருள் வீசப்பட்ட சில நொடிகளில் அந்த சிறுமி நடுங்கிப் போவது சிசிடிவி காட்சியில் தெரிகிறது. சம்பவம் நடந்தபோது அந்த சிறுமியுடன் அவரது சகோதரியும் இருந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காயமடைந்த சிறுமி ஆசிட் வீசியவர்கள் குறித்து தெரிவித்த அடையாளத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி துவாரகா போலீஸ் துணை கமிஷனர் ஹர்ஷ வர்தன் மாண்டவா இது குறித்து கூறுகையில், சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறார் பிரதான சந்தேக நபராக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் அடுத்தடுத்து பிடிபட்டனர். இந்த சம்பவத்துக்கான பின்னணியை முழுமையாக விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கோணங்களிலும் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.