
இன்றைய தலைமுறையினர் இடையே செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. என்றைக்கு செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது, நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, கொட்டாவி விடுவது என்று நம்முடைய ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி ரசிக்க தொடங்கிவிட்டோம். இளசுகள், சிறுசுகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே செல்பி மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.
வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் தலைமுறையினர்.
அதுமட்டுமின்றி சமூகவலைத்தளத்தில் பிரபலமாவதற்காக பல்வேறு விபரீத செயல்களில் இன்றைய தலைமுறையினர் ஈடுபடுகிறார்கள். இது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதை மறந்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் ஒடிசாவில் நடந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, செல்பி மோகத்தால் சமூக ஊடகங்களில் ஒரு சில லைக்குகளை பெறுவதற்காக 2 இளம் சிறுவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ரெயில் தண்டவாளத்தில் படுத்து ‘ரீல்ஸ்’ தயாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஒடிசாவின் பவுத் மாவட்டம் பாலங்கீர் ரெயில் நிலையம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து ‘ரீல்ஸ்’ தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி தனது உயிரைப் பணயம் வைத்து, ஒரு 12 வயது சிறுவன் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள சிறு இடத்தில் தனது உடலை பொருத்தி படுத்துக் கொண்டான். அப்போது அங்கே வந்த ரெயில் ஒன்று அந்த சிறுவன் படுத்திருந்த தண்டவாளத்தை கடந்து சென்றதை, மற்றொரு சிறுவன் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வைரலாக்கி உள்ளனர்.
அதாவது அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் தண்டவாளத்தின் நடுவில் படுத்து கிடப்பதையும், அவனுடன் இருக்கும் மற்றொரு சிறுவன் வீடியோவைப் பதிவு செய்யத் தொடங்குவதையும் வீடியோ காட்டுகிறது. அதனைதொடர்ந்து ரெயில் பாதையில் படுத்திருக்கும் சிறுவனை ரெயில் கடந்து செல்கிறது.
ரெயில் கடந்து சென்ற பிறகு, சிறுவன் எழுந்து தனது நண்பனுடன் (வீடியோ எடுக்கும் சிறுவன்) மகிழ்ச்சியை கொண்டாடுகிறான். அந்த வீடியோவில் சிறுவர்கள் ஒரு வீரச் செயலைச் செய்தது போலவோ அல்லது எதையோ சாதித்தது போலவோ கொண்டாடுகின்றனர். இருப்பினும், ஏதாவது தவறு நடந்திருந்தால், அந்த முட்டாள்தனமான செயலில் அவன் உயிரை இழந்திருக்கலாம்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 நாட்களில் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்து வைரலானது. அப்போது சிறுவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு மைனர் சிறுவர்களை போலீசார் தேடிய நிலையில் கிராம மக்களின் உதவியுடன் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து, தங்கள் உயிரையும், பிறரையும் ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் அவர்கள் இச்செயலை செய்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் தண்டவாளங்கள் இதுபோன்ற சாகசங்களுக்காகவோ அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை உருவாக்குவதற்காகவோ அல்ல. இதுபோன்ற செயல்கள் உயிர்களை ஆபத்தில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ரெயில்வே சேவைகளையும் பாதிக்கும். இதுபோன்ற செயல்களில் உள்ள ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய ரயில்வே நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.