
கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகில் உள்ள தேநீர் கடையில் இருவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த நான்கு நபர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் படு மோசமாகக் காயமடைந்து சுய நினைவின்றி கீழே விழுந்து கிடக்க மற்றொரு நபரை அந்தக் கும்பல் சரமரியாகத் தாக்கி வெட்டிக் கொன்றது அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் குறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயங்களைச் சேகரிக்கும் பணி தொடங்கி இருக்கிறது எனவும். கொலையாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில் கொலையுண்டவர் கோவை கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பகீர் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி காண்பவர்களை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்தில் சர்வ சாதரணமாக இது போன்ற குற்றச் செயல்கள் அரங்கேற்றப்படுவது அப்பகுதி மக்களை மிகுந்த பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவரின் பெயர் மகேஷ் என்பதும் அவர் கோவை சிவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொடூரமாகத் தாக்கப்பட்டு சரமரியான வெட்டுக் காயங்களுடன் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷுக்கு நினைவு திரும்பினால் கொலையாளிகளைப் பற்றிய தகவலும் அவர்கள் தாக்கியதின் பின்னணியும் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.