
கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் ஆதரவாளரும், பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், பஞ்சாபிகள் அதிகம் வாழும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், பல்வேறு வன்முறைச் செயல்களிலும், நாசகார நடவடிக்கை களிலும் ஈடுபட்டதால், இந்திய அரசால் ‘தேடப்படும் பயங்கரவாதி’ என அறிவிக்கப்பட்டார்.
பஞ்சாபில் உள்ள பில்லூரில் ஒரு இந்து பாதிரியாரைக் கொல்லும் சதி உட்பட, சீக்கிய தீவிரவாதம் தொடர்பான குறைந்தது நான்கு NIA வழக்குகளில் நிஜ்ஜார் தற்போது தேடப்பட்டு வந்தார். இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை, ஜூலை மாதம் அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்தது.
நிஜ்ஜார் கொலை குறித்து ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு (IHIT) விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி ஏந்தி வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கூறியதாக கனடா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் (KTF) இன் தலைவராக மட்டுமின்றி, குர்பத்வந்த் சிங் பன்னூன் நடத்தும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (SFJ) அமைப்பின் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிப்பவர்களுள் ஒருவராகவும் பொறுப் பேற்றிருந்தார். இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு முரட்டு தீவிரவாதி என்று அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, பன்னூன் அவரை கனடாவில் உள்ள தனது பிரிவினைவாத அமைப்பான SFJ இன் பிரதிநிதியாக நியமித்தார்.
கனடாவில், ஒரு பிளம்பராக கடினமாக உழைத்து தனக்கான வாழ்வாதாரத்தை அவர் சம்பாதித்துக் கொண்டதாகக் கூறிக்கொண்டாலும், அவர் சர்ரேயின் குருநானக் சீக்கியர் கோவிலின் தலைவர் பதவியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தார் என்பதே உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளில், வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன் நடந்த போராட்டங்கள் அனைத்திலுமே அவர் தொடர்ந்து காணப்பட்டார்.
கனடாவில் பிறந்த சீக்கியரான பிரிவினைவாதி மொனிந்தர் பாய்ல் போன்றவர்களுடன் நஜ்ஜார் நட்பு கொண்டிருந்ததாக உளவுத்துறை ஆதாரங்கள் கூறுகின்றன. பாயில், சமீப காலம் வரை, சர்ரேயில் உள்ள ஸ்ரீ தஷ்மேஷ் தர்பார் எனும் மற்றொரு குருத்வாராவின் தலைவராக இருந்தார்.
குருநானக் சீக்கிய குருத்வாரா மற்றும் ஸ்ரீ தஷ்மேஷ் தர்பார் ஆகிய இரண்டுமே இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தானி செயல்பாடுகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.