சிங்கப்பூரில் தைப்பூசத் விழா!

சிங்கப்பூரில் தைப்பூசத் விழா!
Published on

சிங்கப்பூரில் வாழும் ஏராளமான தமிழர்கள், கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் தைப்பூசத் திருநாளை நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

பக்தர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை முருகனுக்கு நேற்று செலுத்தினார்கள்.

அங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் நேற்று நடந்த தைப்பூச நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சர் தான் சீ லெங்கும் பங்கேற்று வழிபாடு செய்து சிறப்பித்தார்.

அமைச்சர் தான் சீ லெங் கூறுகையில் “கொரோனா காலத்துக்குப் பின் மக்கள் இப்போதுதான் இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்கியுள்ளனர். கொரோனாவை வெற்றிகரமாக கடந்தது எங்கள் தேசத்துக்கும், எங்கள் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வெளியாகும் “தி ஸ்ட்ரைட் டைம்ஸ்” நாளேடு வெளியிட்ட செய்தியில் “ பன்முகக் கலாச்சாரங்கள், மதங்கள், அனைத்தும் சங்கமிக்கும் விழாவாக இந்த தைப்பூசத் திருவிழா இருக்கிறது. இங்கு அனைத்து மதங்களுக்கும், கலாச்சாரத்துக்கும் மதிப்பளிப்பது பெருமைக்குரியது” எனத் தெரிவித்துள்ளது.

மனித வளத்துறை அமைச்சர் தான் சீ லெங், சீனவாசப் பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தமிழ்பக்தர்களுடன் உரையாடினார். சிங்கப்பூரில் உள்ள பாலதண்டாயுதபானி கோயிலுக்கும் ஏாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் அவரவர் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இங்கு இந்த இரு கோயில்களும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.

51வயதான திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை என்பவர் சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 30 கிலோ வேல் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தியது பக்தர்களை பரவசப்படுத்தியது.

சிங்கப்பூர் தைப்பூசத் திருநாளான நேற்று வேறுநாடாக இல்லாமல் தமிழகத்தின் ஆன்மிகத்தலம் போல் காட்சியளித்தது. ஹேஸ்டிங் சாலை, ஷார்ட் சாலை, காதே க்ரீன் சாலையில் ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் ஊர்வலத்தில் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மேளம், மிருதங்கம், உருமி, நாதஸ்வரம், தவில் என இசைத்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாகப் பங்கேற்றனர். 

ஏறக்குறைய 13 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர் என்பது கூடுதல் சிறப்பு. சனிக்கிழமை இரவு 11.30 மணிக்குத் தொடங்கிய தைப்பூசத் திருநாள், நேற்று இரவுவரை தொடர்ந்து நடைப்பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com